‘சாதி-மதம் சாராத பெண்ணுக்கு மிரட்டல்?’ - சான்றிதழ் வழங்கிய சப்-கலெக்டருக்கு சிக்கல் | Thirupattur advocate Sneha Faces some problem in social media

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:04:00 (15/02/2019)

‘சாதி-மதம் சாராத பெண்ணுக்கு மிரட்டல்?’ - சான்றிதழ் வழங்கிய சப்-கலெக்டருக்கு சிக்கல்

‘சாதி-மதம் அற்றவர்’ என்று சான்றிதழ் பெற்ற திருப்பத்தூர் பெண் வழக்கறிஞருக்கு, சமூக வலைத்தளங்களில் ஒரு சில சாதிய அமைப்புகளும், மத அமைப்புகளும் மிரட்டல்கள் விடுத்துள்ளன. அதிகார வர்க்கத்தின் அழுத்தம் காரணமாக இச்சான்றிதழ் வழங்கிய சப்-கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சிநேகா

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. தமிழ்ப் பேராசிரியர். இவரின் மனைவி ம.ஆ.சிநேகா. வழக்கறிஞரான இவருக்குத்தான், ‘சாதி-மதம் அற்றவர்’ என்று திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பரிந்துரையின் பேரில் தாசில்தார் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார். ‘‘சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில் சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியலைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அதன்படி, சாதி-மதம் சாராதவர் என்று அங்கீகாரம் பெற்றிருக்கும் ம.ஆ.சிநேகா, சமூக மாற்றத்திற்கான வலுவான விதை என்று பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அதே நேரத்தில் எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. சாதியம், மதவாதம் பேசும் ஒரு சில அமைப்புகள் சமூக வலைத்தளங்களில், அந்த பெண் வழக்கறிஞருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டுவருகிறார்கள். 

சப் - கலெக்டர்

மேலும், சான்றிதழ் வழங்கிய சப்-கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சாதி, மதத்தைச் சாராதவர் என சான்றிதழ் வழங்குவது பற்றி முன்கூட்டியே மாவட்ட கலெக்டர் ராமனிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அதிகார வர்க்கத்திலிருந்து அழுத்தங்கள் வந்துள்ளதாகவும் , சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், கலெக்டர் அலுவலக தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதுபற்றி வழக்கறிஞர் ம.ஆ.சிநேகாவிடம் பேசினோம். ‘‘அமைப்பு சார்ந்த எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால், போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை மறுக்கும் விஷயம். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று சமூக வலைத்தளங்களில் அமைப்பு சாராதவர்கள் விமர்சிக்கிறார்கள். நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவள் இல்லை. இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தருகிறேன். எல்லோருக்கும் இது பொருந்தாது. ஆதிக்க சாதியினர் துறந்துவர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதி பெறுவது அவசியம் என்று பதிலளித்தேன்’’ என்றார்.

தாசில்தார் சத்தியமூர்த்தியிடம் கேட்டதற்கு, ‘‘விசாரணை அடிப்படையில் சாதி சான்றிதழ் கொடுக்குறோம். அதே விசாரணை அடிப்படையில் தான், சாதி-மதத்தைச் சாராதவர் என்று வழக்கறிஞர் ம.ஆ.சிநேகாவிற்கு இதர சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். இதேபோன்ற சான்றிதழ், கேரளாவிலும் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கலெக்டர் அலுவலக தரப்பிலிருந்து விளக்கம் கேட்டுள்ளதால், நான் அறிக்கை அளித்துள்ளேன். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் சார்ந்திருக்கலாம் அல்லது சாதி, மதங்களைச் சாராமலும் இருக்கலாம். அவரவர் விருப்பம். இச்சான்றிதழ் வழங்கியிருப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார் விளக்கமாக. இதேபோல் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை.


[X] Close

[X] Close