‘காதலை ஆதரிக்கிறீர்களா?, எதிர்க்கிறீர்களா?’ - ஆர்வமுடன் கையெழுத்திட்ட மாணவிகள் | Valentine's Day signature movement

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:06:00 (15/02/2019)

‘காதலை ஆதரிக்கிறீர்களா?, எதிர்க்கிறீர்களா?’ - ஆர்வமுடன் கையெழுத்திட்ட மாணவிகள்

புதுக்கோட்டையில், காதலர் மற்றும் சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களை ஆதரித்து காதலர் தின கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில், ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.

புதுக்கோட்டை இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோர் சார்பில்,  காதலர் மற்றும் சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களை ஆதரித்து கலந்தாய்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில், காதல் மனம் புரிந்தவர்,  ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற 3பிரிவுகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கையெழுத்து போர்டு வைக்கப்பட்டு இருந்தது. காதல் திருமணம் செய்தவர்கள் ஆர்வமுடன் ஜோடியாகக் கையெழுத்திட்டதோடு, அங்கு உள்ளவர்களிடம் தங்களது காதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். காதலை ஆதரிக்கிறோம் என 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். குறிப்பாக, மாணவிகளே அதிகளவில் ஆதரித்து தங்களது கையெழுத்துகளைப் பதிவிட்டு இருந்தனர். காதலை ஆதரிக்கும் சிலரிடம் பேசினோம், 'காதல் என்பது ஒரு அலாதியான அனுபவம். அதை அனுபவித்தவர்கள் மட்டுமே ஆதரிக்க முடியும்" என்றனர்.


   அதே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காதலை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கையெழுத்திட்டு இருந்தனர். காதலை எதிர்க்கிறேன் என்று கையெழுத்திட்ட மாணவி ஒருவரிடம் காதலை நீங்கள் எதிர்ப்பதற்கான காரணம்  குறித்துக் கேட்டோம், சற்றே தயங்கிய மாணவி, 
  "காதல் செய்தால், சாதி, மதம் என்ற போர்வையில் எப்படியாவது பெற்றோர்கள் பிரித்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கும் துணிகின்றனர். இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  "என்னை ஒருவன் ஒருதலையாகக் காதலித்தான். தினமும் என்னைப் பாலோ செய்து வந்து  காதலிப்பதாகக் கூறினார். எனக்கு அவன் மீது உடனே காதல் ஏதும் வரவில்லை. என்று கூறி அவனைப் புறக்கணித்தேன். ஆனால், நீ என்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்று எனக்குத் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருகிறான். இதனால், என்னவோ காதலை நான் வெறுக்கிறேன்" என்றார்.
 


[X] Close

[X] Close