“மோடி நான்ஸ்டாப்பபிள்!” - ஈரோட்டில் அதிரடித்த தமிழிசை செளந்தரராஜன் | “modi is non stoppable!' - tamilisai soundararajan speaks in erode...

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:06:40 (15/02/2019)

“மோடி நான்ஸ்டாப்பபிள்!” - ஈரோட்டில் அதிரடித்த தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை

கைத்தறி, விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பு மற்றும் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான கூட்டம் ஆகியவை ஈரோட்டில் நேற்று (பிப்-14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “இன்று தமிழகத்தில் பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெற்று, வேரூன்றி ஆலவிருட்சமாக வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளை விட நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் விரைவாகத் தயாராகி வருகிறோம் என்பதை வலியுறுத்தும் வரையில் இத்தகைய கூட்டங்கள் நடத்தி வருகிறோம். மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை மக்களுக்குக் கொடுக்கிறார். அப்படியிருக்க, தமிழக வளர்ச்சிக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து கொண்டிருக்கிறார் வைகோ. அரசியல் காரணங்களுக்காக மட்டும் பிரதமர் இங்கு வரலை. நாட்டு மக்களுக்குப் பல நல்ல திட்டங்களை அர்ப்பணிக்க வருகிறார்” என்றார்.

தமிழிசை

தொடர்ந்து பேசியவர், “தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தமிழக மக்களே வைகோவை மன்னிக்க மாட்டார்கள். மெட்ரோ ரயில் கொண்டு வர வைகோ கறுப்புக்கொடி காண்பிக்கிறாரா?... தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்ற திருப்பூரில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையைக் கொண்டு வர எதிர்க்கிறாரா... சாமானிய மக்கள் வட சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டுமென்று கேட்கிறார்கள் அதற்கு கறுப்புக்கொடி காட்டுகிறாரா?...இரண்டரை லட்சம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கப் போகின்ற ராணுவத் தளவாடம் அமைக்க கருப்புக் கொடி காண்பிக்கிறாரா?... இந்தக் கறுப்புக்கொடி என்பது வெற்று வேலை. வெற்று அரசியல். அது எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. வைகோவே கறுப்புக்கொடி காட்டி ஓய்ந்து போவார். காவி கொடி மேலே பறக்க பறக்க, கறுப்புக்கொடி ஓய்ந்துபோகும்.

முலாயம் சிங் யாதவே கைகூப்பி, மோடி தான் மறுபடியும் பிரமராக வரவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். எனவே, இது ஒட்டுமொத்த எதிர்க்கட்சியின் கருத்து. இன்றைக்கு எதிர்க்கட்சிகள் கூட மோடி மறுபடியும் பிரதமராக வர வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள். மோடி நான்ஸ்டாப்பபிள். மோடி மறுபடியும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. அதனால் தான் இவர்களெல்லாம் சலசலத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும். பா.ஜ.க தமிழகத்தில் வெற்றி பெற்று, பிரமாண்டமான திருப்புமுனையை ஏற்படுத்துவோம்” என்று அதிரடித்தார்.


[X] Close

[X] Close