‘பட்டா பெயர் மாற்ற லஞ்சம்; விஜிலென்ஸில் பிடிபட்ட வி.ஏ.ஓ!’ - கொண்டாடிய கிராம மக்கள் | Village administrative officer arrested for bribery

வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:08:58 (15/02/2019)

‘பட்டா பெயர் மாற்ற லஞ்சம்; விஜிலென்ஸில் பிடிபட்ட வி.ஏ.ஓ!’ - கொண்டாடிய கிராம மக்கள்

அரக்கோணத்தில், பட்டா பெயர் மாற்றுவதற்காக விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும்களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்

திருவள்ளூர் மாவட்டம், திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவனின் மகன் திவாகர் (38). வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தில், அரக்கோணம் வட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர்மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில், அரக்கோணம் நம்மனேரி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனும் (48), அவரின் தம்பியும் கடந்த 7-ம் தேதி, வி.ஏ.ஓ திவாகரைச் சந்தித்தனர். தந்தை இறந்துவிட்டதால், அவரின் பெயரில் உள்ள வீடு, நிலம் போன்ற சொத்துகளை, வாரிசு என்ற முறையில் எங்கள் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்துகொடுக்குமாறு கூறினர். ‘‘பட்டா பெயர் மாற்ற அண்ணன், தம்பி இருவரும் ஆளுக்கு ரூ.6 ஆயிரம் என மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தரவேண்டுமென’’ வி.ஏ.ஓ திவாகர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர்

லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதனும் அவரின் தம்பியும், வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். முதலில் நம்ப மறுத்த போலீஸார், ‘‘மீண்டும் வி.ஏ.ஓ-விடம் பேசுங்கள். அப்போது, செல்போனில் அவரின் பேச்சுகளை ரெக்கார்ட் செய்து காட்டுங்கள்’’ என்று ஐடியா கொடுத்தனர். 10-ம் தேதி, வி.ஏ.ஓ திவாகரை லோகநாதன் மீண்டும் சந்தித்தார். அப்போது, ‘‘இறுதியாக ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவேன்’’ என்று வி.ஏ.ஓ திவாகர் பேரம் பேசியதை, விவசாயி லோகநாதன் செல்போனில்  பதிவுசெய்தார். அந்த ஆடியோ ஆதாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒப்படைத்தார். அதன்பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லோகநாதனிடம் கொடுத்து அனுப்பினர். அவர், அந்தப் பணத்தை 14-ம் தேதி கொண்டுசென்று வி.ஏ.ஓ திவாகரிடம் கொடுத்தார்.

வி.ஏ.ஓ பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அவரை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு நன்றி கூறி, வி.ஏ.ஓ கைதானதைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுபற்றி கிராம மக்களிடம் கேட்டதற்கு, ‘‘வி.ஏ.ஓ திவாகர் எப்போதும் ஒருமையில் பேசக்கூடியவர். வயதானவர்கள், பெண்கள் என்றுகூட பார்க்காமல், சுடுமூஞ்சியை காட்டிக் கடிந்துகொள்வார். லஞ்சம் கொடுத்தால்தான் அவரிடம் வேலை நடக்கும். கலப்புத் திருமணம் செய்த ஒரு ஜோடி, சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ திவாகரைச் சந்தித்தபோது, ஆபாசமாகப் பேசி விரட்டியடித்தார். அதேபோல, மத்திய அரசு அறிவித்த ரூ.2000 சிறப்பு நிதியைப் பெறுவது எப்படி என்று கேட்கச் சென்ற விவசாயிகளை அநாகரிகமாகப் பேசி துரத்தினார். இவ்வளவு மோசமான வி.ஏ.ஓ-வை பணியிலிருந்து நீக்க வேண்டும்’’ என்றனர்.


[X] Close

[X] Close