‘காதலர் தினத்தில் மனைவியின் இதயம் தானம்!’ - மனதை உருகவைத்த கணவரின் கதறல் | Valentine's Day is the donation of the wife to the heart -The screaming of the molten husband

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (15/02/2019)

கடைசி தொடர்பு:07:50 (15/02/2019)

‘காதலர் தினத்தில் மனைவியின் இதயம் தானம்!’ - மனதை உருகவைத்த கணவரின் கதறல்

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலிப்பு வந்ததால், மருத்துவர்கள் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். இந்த நிலையில், திடீரென அப்பெண்ணுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், காதலர் தினமான நேற்று, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பிறந்து ஏழே நாள்களான பிஞ்சுக் குழந்தையுடன் மனைவியைப் பறிகொடுத்த கணவன் கதறிய சம்பவம், மனதை உருகவைத்தது.

கோகிலா

கடலூர் மாவட்டம், சிதம்பரம் புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம்ராஜ். பெங்களூருவில் இன்ஜினீயராக உள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கோகிலா (24) என்ற பெண்ணுக்கும், கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு காதலித்தனர். கோகிலா கர்ப்பமானார். திடீரென அவருக்கு உடல் எடை குறையத் தொடங்கியது. மெலிந்துகொண்டேபோனார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த இந்த நேரத்தில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால்,  கடந்த 4-ம் தேதி, வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி மருத்துவமனையில் கோகிலா அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த கோகிலாவுக்கு, கடந்த 7-ம் தேதி தலைவலி ஏற்பட்டு, திடீரென வலிப்புவந்தது. மருத்துவக் குழுவினர், உடனடியாக அறுவைசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். கோகிலாவைப் போலவே அழகான பெண் குழந்தை. ஆனால், குழந்தையின் எடை இரண்டு கிலோவிற்கும் குறைவாக இருந்தது. அதனால், குழந்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. கோகிலா சுயநினைவின்றி இருந்தார்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

இந்த நிலையில், காதலர் தினமான நேற்று அதிகாலை 3.37 மணிக்கு, கோகிலாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. கணவர் கௌதம்ராஜ் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், மனைவியின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க அவர் முன் வந்தார். சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தது. இதயம் மற்றும் நுரையீரல், சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்களை, சி.எம்.சி மருத்துவமனை தானமாகப் பெற்றுக்கொண்டது. இந்த நிகழ்வு சில மணி நேரங்களில் நடந்துமுடிந்தது. மீளமுடியாத சோகத்தில் உறைந்துபோயிருந்த கௌதம்ராஜை நாம் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

நம்மிடம் அவர் கூறுகையில், ‘‘திருமணமாகி ஓராண்டுகூட ஆகவில்லை. அவளுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும். அவள் மண்ணுக்குள் போகிறாள். அவளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதால், இம்மண்ணில் அவள் இன்னும் வாழ்வதாக நினைத்துக்கொண்டு நானும் வாழ்வேன். காதலர் தினத்தில் எனக்கான இதயத்தை, வேறு யாருக்கோ கொடுத்துவிட்டுச் செல்கிறாள்’’ என்று கதறி அழுதார்.

உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றபின், கோகிலாவின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவியின் சொந்த ஊரான போளூருக்குக் கொண்டுசென்றார். அங்கு,  இன்று (15-ம் தேதி) இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. காதலர் தினத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


[X] Close

[X] Close