'காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காப்பாத்துங்க!' - விழிப்புஉணர்வு நிகழ்ச்சி | Fire Awareness program held at Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (15/02/2019)

கடைசி தொடர்பு:12:25 (15/02/2019)

'காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காப்பாத்துங்க!' - விழிப்புஉணர்வு நிகழ்ச்சி

விழிப்பு உணர்வு

காட்டுத்தீ, வழக்கமாக கோடை காலத்தில்தான் ஏற்படும். ஆனால் தற்போது, வசந்த காலத்திலேயே காட்டுத் தீவிபத்துகள் ஏற்படுகின்றன. கற்கள் உரசி இயற்கையாகத் தீப்பிடித்தல் என்பது மிகக் குறைந்த அளவே நடைபெறுகின்றன.  காட்டுக்குள் விறகு, இலை தழைகளை எரிப்பதாலும், பீடி, சிகரெட் பற்ற வைப்பதாலும்தான் அதிக அளவில் தீவிபத்துகள் நேர்கின்றன. சில தினங்களுக்கு முன்பு, மதுரை அரிட்டாபட்டி மலைப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற காட்டுத் தீவிபத்துகள் குறித்த விழிப்பை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகக் கலை நிகழ்ச்சி ஒன்றை வனத்துறை ஏற்பாடுசெய்தது.

வனம்

அதன்படி, தமிழ்நாடு வனத்துறையின் திண்டுக்கல் மாவட்ட வனக்கோட்டம் மற்றும் அழகர்கோயில் வனச்சரகம் சார்பில், தீத்தடுப்பு விழிப்பு உணர்வுக் கலைநிகழ்ச்சி, மதுரை அழகர்கோயில் பகுதியில் நடைபெற்றது. இதில், 'காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காப்பாத்துங்க' என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திருநெல்வேலி 'அரும்புகள் தொண்டு நிறுவனம்' நடத்திய இந்தக் கலை நிகழ்ச்சியில் காடு, காட்டு உயிரினங்கள் குறித்த செய்திகளையும், அவற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும், கலைஞர்கள் ஆடிப் பாடி நடித்துக்காட்டினர்.'மேற்குத்தொடர்ச்சி மலைக் காட்டைக் காக்கவே...' போன்ற பாடல்களுக்கு கலைஞர்கள் ஆடும்போது, மக்கள் கைதட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பேசுகையில், 'காட்டுத்தீ குறித்த தகவல் எங்களுக்கு உடனடியாக வந்துசேரும் வகையில் தொழில்நுட்பத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டேராடூனை மையமாகக் கொண்டு ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தீவிபத்தை அறிந்துகொள்வது சற்றே எளிதாகியுள்ளது. எனினும், தீயை அணைப்பது எப்போதுமே எங்களுக்கு சவாலானதுதான். எனவே, காட்டுத்தீ விபத்துகளுக்கு மக்கள் காரணமாவதைத் தவிர்க்கச் செய்யும் முயற்சியாக இந்த விழிப்புக் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது" என்றார். 

இதில், நத்தம் மற்றும் அழகர்கோயில் வனச் சரகர்கள், வனக் கண்காணிப்பாளர், உதவி தீயணைப்பு அலுவலர்கள், பணியாளர்கள், அழகர்கோயில் அறநிலையத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பகுதியில் குடியிருக்கும் கிராம மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
 


[X] Close

[X] Close