தேர்தலை வைத்து என் மகனின் வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையில் நியாயம் - அற்புதம்மாள் | arputhammal traveling across tamilnadu to find justice for perarivalan release

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:11:00 (15/02/2019)

தேர்தலை வைத்து என் மகனின் வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையில் நியாயம் - அற்புதம்மாள்

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அற்புதம்மாள் பன்னிரண்டாவது நிகழ்வுக்காக திருநெல்வேலி வந்திருந்தார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.

``பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த தியாகராஜன் ஐ.பி.எ‌ஸ் அவனது வாக்குமூலத்தில் சில பகுதிகளை நீக்கி அதன் காரணமாகவே பேரறிவாளன் தற்போது தண்டனை அனுபவித்து வருவதாகக் கூறி இருக்கிறார். பல குழப்பங்களுக்கு மத்தியில்தான் இந்த வழக்கே நடைபெற்றது. நாங்கள் சாமானியர்கள்; சட்டத்தை மதித்தோம்; அதனால் அது அளித்த தண்டனையை ஏற்றுக் கொண்டோம்; முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா குற்றவாளிகள் என அழைக்கப்பட்டு வந்த என் மகனைத் திருவாளர்கள் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி அவர்கள் விடுதலைக்கு அடித்தளமிட்டார். தற்போது அவர் வழியில் செயல்படும் அரசும் சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கான சட்டமுன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி விட்டது. சட்ட அமைச்சரும் அனைத்திற்கும் தனித்தனியாகக் கோப்புகள் வைத்து ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். அவர் கையொப்பமிடுவது மட்டும்தான் பாக்கி; கையொப்பமிட்ட உடன் விடுதலை ஆகி விடுவார்கள்; நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று தெரிவித்தார். நாங்களும் எழுவரும் விடுதலையாகி விடுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். தற்போது வரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஆளுநர் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டியவர். அவர் சட்டத்தை மதித்து அந்தச் சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டு என் மகனை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றமே மாநில அரசு விடுதலை செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்ட பிறகும் ஆளுநர் காலதாமதம் செய்வது என்ன நியாயம்? அப்படிச் செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அல்லவா! தேர்தல் நேரத்தில் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. தேர்தலை வைத்து என் மகனின் வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையில் நியாயம்.! இன்னும் காலதாமதம் செய்யும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடப் போகும் திட்டம் எதுவும் இல்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.19 வயதில் சிறை சென்று என் மகனின் இளமைக்காலம் முழுவதும் பறிபோய் விட்டது. இனியாவது அவனுக்கு ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டும். ஆளுநர் கையொப்பத்தில் தான் என் மகனின் விடுதலை இருக்கிறது.” என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார். 

கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் ``திரைக்கதையாக நாவலாக யோசித்துக் கூட பார்க்க முடியாத உணர்ச்சிப் பெருக்கான கதைதான் பேரறிவாளன் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி மறுக்கப்பட முடியாதது. ஆனால் அது தாமதமாகப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நீதியைத் தொடர்ந்து அறத்தோடு பேசிக் கொண்டு வருகிறார் அற்புதம்மாள். அந்த அறத்தைப் பேரறிவாளனுக்கு மறுக்கப்படும் நீதியை நம் குடும்பங்களுக்குள், நம் நண்பர்களுக்குள், கல்லூரி மாணவர்களுக்குள் பேசப்பட வேண்டும். அனைவரும் அற்புதம்மாளின் குரலாகச் சேர்ந்து ஒலிக்க வேண்டும். நம் குடும்பத்தில் யாருக்கும் நிகழ்ந்துவிடாதபடி நம் குரல் இருக்க வேண்டும். நம் குடும்பங்களுக்குள் இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டு கல்லூரி மாணவர்களால், பெண்களால், குடும்பங்களால் இந்தப் பிரச்னை முன்னெடுக்கப்படும் போதுதான் இதற்கு ஒரு சரியான தீர்வு எட்ட முடியும் என நினைக்கிறேன்.” என்று கூறினார். 

சமூகவலைதளங்களில் எழுவர் விடுதலை குறித்த தகவல்களையும் அதற்கான தேவைகளையும் அதிகம் பகிர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விரைவில் #28 YearsEnoughGovernor ஹேஷ்டேக் உடன் # SignOrResignGovernor ஹேஷ்டேக்கையும் சேர்த்துப் பதிவிட்டு எழுவர் விடுதலைக்கு ஆதரவு திரட்டவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 


[X] Close

[X] Close