ஓட்டம்பிடித்த புரோக்கர்கள்! - இரவில் அதிரவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை | Vigilance officers ride at Rameshwaram sub register office

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:11:20 (15/02/2019)

ஓட்டம்பிடித்த புரோக்கர்கள்! - இரவில் அதிரவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை

ராமேஸ்வரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரம் நடந்த சோதனையில், ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான, கணக்கில் வராத பணம் சிக்கியதால், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை
 

ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம், உச்சிப்புளி  பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நில விற்பனை மற்றும் பதிவு தொடர்பான பணிகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், இங்கு சமீபகாலமாகப் போலி ஆவணங்கள்மூலம் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ஆய்வுக்குழு துணை ஆட்சியர்  சேக் முகைதீன் தலைமையில், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பீட்டர், வானதி உள்ளிட்டோர் ராமேஸ்வரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையிட வந்த அதிகாரிகளைக் கண்டதும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த புரோக்கர்கள் சிலர், அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இந்நிலையில், அலுவலக வாயில் கதவைப் பூட்டிய அதிகாரிகள், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இரவு 11 மணி வரை நீடித்த இந்தச் சோதனையில், சில ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டன. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே சிக்கியதால் ஏமாற்றம் அடைந்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் கணக்கில் வராத பணத்தையும் பறிமுதல் செய்துள்ள நிலையில், தொடர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.


[X] Close

[X] Close