‘ஹெல்மெட் அணியாததால்தான் உங்கள் மனைவி உயிரிழந்தார்!’- நாராயணசாமிக்கு கிரண் பேடி பதில் | Puducherry CM's wife died as she was not wearing helmet Kiran Bedi says

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (15/02/2019)

கடைசி தொடர்பு:12:08 (15/02/2019)

‘ஹெல்மெட் அணியாததால்தான் உங்கள் மனைவி உயிரிழந்தார்!’- நாராயணசாமிக்கு கிரண் பேடி பதில்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், கடந்த  சில காலமாகத் தொடர்ந்து அதிகார மோதல் நிலவிவருகிறது. முதல்வரை ஆளுநர் குறை கூறுவதும், ஆளுநரை முதல்வர் விமர்சிப்பதும் தொடர் கதையாகிவருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண் பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திவருகிறார் முதல்வர் நாராயணசாமி. அவரின் போராட்டம், இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இதற்கு, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இரு தினங்களுக்கு முன்பு, தேசிய சாலைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சாலையில் ஹெல்மெட் இல்லாமல் சென்றவர்களைப் பிடித்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு, முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில், டெல்லி சென்றுள்ள கிரண் பேடி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘ புதுச்சேரி முதல்வரின் மனைவி, சில வருடங்களுக்கு முன் ஸ்கூட்டரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அன்று, அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதன் விளைவாகவே இறந்தார். இது தெரிந்தும்,  நான் பொதுமக்களை ஹெல்மெட் அணிய வலியுறுத்தியது வரம்பு மீறிய செயல் என முதல்வர் கூறுகிறார்.  கடந்த 7-ம் தேதி, 36 பிரச்னைகள் தொடர்பாக நாராயணசாமி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 8-ம் தேதிதான் என் கைக்கு கடிதம் கிடைத்தது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாதி பிரச்னைகளுக்கு முன்னதாகவே தீர்வுகாணப்பட்டுள்ளது. 13-ம் தேதி, கடிதத்துக்குப் பதில் கூறவில்லையெனில் தர்ணாவில் ஈடுபடுவோம் என அவர் குறிப்பிடவே இல்லை. கோப்புகளை ஆராயாமல் எப்படி அதற்கு அனுமதி அளிக்கமுடியும். 

வரும் 20-ம் தேதிவரை நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதனால், 21-ம் தேதி காலை  10 மணிக்கு முதல்வரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளேன். இருந்தும், அவர் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன் அமர்ந்துள்ளார். முதல்வர், பொதுமக்களை ஹெல்மெட் அணிய விடமாட்டார். புதுச்சேரியில், மூன்று நாளுக்கு ஒருவர்  சாலை விபத்தில் உயிரிழக்கிறார். நான் என் கடமையை மட்டும்தான் செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 
 


[X] Close

[X] Close