ரகசிய கண்காணிப்பில் வீட்டில் சிக்கிய ஒரு டன் குட்கா! - தப்பியோடிய ஓனரைத் தேடும் போலீஸ் | one ton gutka seized in a house in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (15/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (15/02/2019)

ரகசிய கண்காணிப்பில் வீட்டில் சிக்கிய ஒரு டன் குட்கா! - தப்பியோடிய ஓனரைத் தேடும் போலீஸ்

நெல்லையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, ஒரு டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.  

குட்கா பறிமுதல்

நெல்லை டவுன் அருகே, கரிக்காத்தோப்பு இடகரையில் உள்ள ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா, பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலி பீடிகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், ரகசியமாக அந்தப் பகுதியைக் கண்காணித்துவந்தனர். அப்போது, ஒரு லாரியில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கொண்டுவரப்பட்டதைக் கண்டுபிடித்தனர். 

மாட்டுத் தீவன மூட்டைகளுக்கு நடுவே, பெட்டிகள் மற்றும் மூட்டைகளில் பதுக்கி எடுத்துவரப்பட்ட புகையிலைப் பொருள்களை கரிக்காத்தோப்பு இடகரையில் உள்ள ஹனீபா என்பவரின் வீட்டில் இறக்குவதற்காக எடுத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதனால், அந்த வீட்டில் சுத்தமல்லி போலீஸாரின் துணையுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டின் உள்ளே மூட்டை மற்றும் பெட்டிகளில் இருந்த, சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாரி பறிமுதல்

இந்த நிலையில், வீட்டின் உரிமையாளரும் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தவருமான ஹனீபா தப்பியோடிவிட்டார். அவரது சகோதரரைப் பிடித்து, சுத்தமல்லி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இதனிடையே, குட்கா ஏற்றிவந்த லாரியை போலீஸார் பறிமுதல்செய்தனர். லாரி ஓட்டுநர் சம்பத் என்பவரைப் பிடித்து, எங்கிருந்து குட்கா கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்தும் எந்தெந்த இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் தீவிர விசாரணை நடந்துவருகின்றனர். 


[X] Close

[X] Close