8-ம் வகுப்பில் விஜே... ப்ளஸ் ஒன்ல நடிகை..! - குடும்ப பாரத்தை சுமந்த யாஷிகாவின் சோகக்கதை | Why yashika committed suicide

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (15/02/2019)

கடைசி தொடர்பு:15:51 (15/02/2019)

8-ம் வகுப்பில் விஜே... ப்ளஸ் ஒன்ல நடிகை..! - குடும்ப பாரத்தை சுமந்த யாஷிகாவின் சோகக்கதை

துணை நடிகை யாஷிகா

சென்னை பெரவள்ளூரில் துணை நடிகை யாஷிகாவை தற்கொலைக்குத் தூண்டியதாக கல்லூரி மாணவர் மோகன்பாபு என்கிற அரவிந்த்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரைப் பிடித்தது எப்படி என போலீஸார் நம்மிடம் விவரித்தனர். 

திருப்பூர், வீரபாண்டி, கௌரிஸ்வரர் நகர், சாமிநாதன் காம்பவுண்ட்டைச் சேர்ந்தவர் எஸ்தர் பியூலா ராணி. இவரின் கடைசி மகள்தான் மேரி ஷீலா ஜெயராணி என்கிற யாஷிகா (21). யாஷிகாவின் அப்பா டேனியல் தங்கராஜ், குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கஷ்டப்பட்டு குழந்தைகளை எஸ்தர் பியூலா ராணி வளர்த்தார். `மன்னர் வகையறா' என்ற படத்தில் துணை நடிகையாக யாஷிகா நடித்துள்ளார். சென்னை பெரவள்ளூர், ஜி.கே.எம் காலனியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த யாஷிகா, கடந்த 12-ம் தேதி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

 துணை நடிகை யாஷிகா

அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எஸ்தர் பியூலா ராணி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தன் ஆகியோர் விசாரித்தனர். டைரியில் யாஷிகா எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், யாஷிகாவின் காதலன் செம்பியத்தைச் சேர்ந்த மோகன்பாபு என்கிற அரவிந்த் குறித்த தகவல்கள் இருந்தன. இதையடுத்து மோகன்பாபுவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையிலும் எஸ்தர் பியூலா ராணியின் புகாரின் பேரிலும் நேற்றிரவு மோகன்பாபுவை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது துணை நடிகை யாஷிகாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 306ன் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து எஸ்தர் பியூலா ராணி கூறுகையில், ``என்னுடைய இளைய மகள்தான் யாஷிகா. அவர், 8-ம் வகுப்பு படித்தபோது லோக்கல் சேனலில் வி.ஜே-வாகப் பணியாற்றினார். அந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஒரு பெண் மூலம் யாஷிகாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ப்ளஸ் ஒன் படித்து முடித்தவுடன் சினிமாவில் நடிக்க தனியாக சென்னைவந்தார். அவர் சாலிகிராமத்தில் தோழிகளுடன் தங்கியிருந்தார். அதன்பிறகுதான் பெரவள்ளூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார். தைரியமான பொண்ணு, குடும்ப கஷ்டத்தை உணர்ந்தவள். நான் சோகமாக இருக்கும் சமயத்தில் எனக்கு அவள் ஆறுதல் கூறுவாள். 

துணை நடிகை யாஷிகா

சென்னையில் தங்கியிருந்த சமயத்தில்தான் செல்போன் கடையில் வேலை பார்த்த மோகன்பாபு என்கிற அரவிந்த்துடன் யாஷிகாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறினர். அப்போது யாஷிகாவின் ஜாதகத்தில் 25 வயதுக்கு மேல் மாங்கல்ய பொருத்தம் இருப்பது தெரிந்தது. இதனால் திருமணம் தள்ளிப்போனது. சினிமாவில் நடித்துக்கொண்டே சென்னையில் உள்ள கால்டாக்ஸி நிறுவனத்தில் யாஷிகா வேலை பார்த்தார். குடும்ப கஷ்டத்துக்காக கடினமாக உழைத்தார்.

தற்கொலை செய்வதற்கு முன் என்னிடம் போனில் பேசினார். அப்போது நான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். `ஸாரி அம்மா, ஐ லவ் யூ'  எனக் கடைசியாக அவர் கூறினார். அந்தச் சமயத்தில் என்னுடைய செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆனது. அதன்பிறகு சார்ஜ் போட்டுவிட்டு யாஷிகாவுக்கு போன் செய்தேன். அப்போது அவளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள யாஷிகாவின் நண்பர் ஒருவரிடம் போனில் தகவலைத் தெரிவித்தேன். அவர், வீட்டில் சென்று பார்த்தபோதுதான் யாஷிகா தற்கொலை செய்து கொண்ட தகவலைக் கூறினார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன்.

உடனடியாக சென்னைக்கு வந்தபோது யாஷிகாவின் சடலத்தைப் பார்த்துக் கதறினேன். அவரின் தற்கொலை குறித்து போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அதன்பிறகுதான் மோகன்பாபுவை கைது செய்துள்ளனர். தற்போது யாஷிகா தங்கியிருந்த வாடகை வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை மோகன்பாபு தரப்பினர் கேட்டுவருகின்றனர். ஆனால் அந்தத் தொகையை யாஷிகாதான் கொடுத்துள்ளார். என் மகளுக்கு நேர்ந்த கதி இனி வேறுயாருக்கும் ஏற்படக் கூடாது. யாஷிகாவின் அஸ்தியை கடலில் கரைத்துவிட்டு ஆதரவின்றி நிற்கிறேன்" என்றார் கண்ணீர்மல்க. 

துணை நடிகை யாஷிகா

போலீஸார் கூறுகையில், ``யாஷிகா வழக்கில் கைதான மோகன்பாவின் அம்மா, சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரின் அப்பா சரிவர வேலைக்குச் செல்லவில்லை. இருப்பினும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே பகுதி நேரமாக செல்போன் கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போதுதான் யாஷிகா, அந்த செல்போன் கடைக்கு அடிக்கடி சென்றுள்ளார். இருவரும் காதலித்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டினருக்கும் தெரியும். ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல வாழ்ந்துள்ளனர். யாஷிகாவின் சில செயல்கள் மோகன்பாபுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவரைக் கண்டித்துள்ளார். இந்த மனவருத்தத்தில்தான் யாஷிகா தற்கொலை செய்துள்ளார்" என்றனர். 

துணை நடிகை யாஷிகா தற்கொலை வழக்கில் கைதான மோகன்பாபு


மோகன்பாபு போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ``நானும் யாஷிகாவும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம். அவரை திருமணம் செய்து கொள்ளவிரும்பினேன். இந்தச் சமயத்தில்தான் எனக்கும் அவருக்கும் திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது அவரை அடித்துவிட்டேன். மேலும் கோபத்தில் நான் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டேன். அந்தச் சமயத்தில்தான் யாஷிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்று கண்ணீர்மல்கக் கூறியுள்ளார். 

 துணை நடிகை யாஷிகா, ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அவரின் ஃபேஸ்புக் பதிவில் `பஞ்சாயத்து பட்டி', `தேன்மிட்டாய்', `மங்குனி பாண்டியர்கள்', `அரசமர பட்டி' ஆகிய படங்களில் நடித்திருப்பதாகவும் `சக்ரயுத்தம்' என்ற படத்தில் நடித்துவருவதாகவும் பதிவிட்டுள்ளார். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற யாஷிகா ஆசை, நிறைவேறாமல் போய்விட்டதாக அவரின் உறவினர்கள் கண்ணீர்மல்கக் கூறினர். 

துணைநடிகை யாஷிகாவின் தற்கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பத்துக்குப் பின்னால், உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் உள்ளார். யாஷிகாவின் டைரி குறித்த தகவல் கிடைத்ததும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக காதலனும் கல்லூரி மாணவனுமான மோகன்பாபுவை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 


[X] Close

[X] Close