`நான் குற்றவாளி தாண்டா...நான் சுத்தத்தங்கம் தாண்டா!' - போலீஸ் ஸ்டேஷன் முன் டிக்டாக் வாலிபர் கைது | nellai youngster was arrested for defaming police station in tktak

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (15/02/2019)

`நான் குற்றவாளி தாண்டா...நான் சுத்தத்தங்கம் தாண்டா!' - போலீஸ் ஸ்டேஷன் முன் டிக்டாக் வாலிபர் கைது

நெல்லை மாவட்டத்தில், காவல் நிலையங்கள் முன் டிக்டாக் செய்து கைதாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பாப்பாக்குடி காவல் நிலையம் முன்பாக டிக்டாக் செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

டிக்டாக் - கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர், சண்முகையா. இவரது மகன் ஜோதிமுருகன். 25 வயதாகும் இவர், கூலித்தொழில் செய்துவருகிறார். இவரது சகோதரரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, பாப்பாக்குடி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச்சென்றனர். அவரைக் காவல் துறையினர் விடுவிக்காமல் நீண்ட நேரமாக விசாரித்துள்ளனர். 

இந்த நிலையில், தனது சகோதர் விடுவிக்கப்படாததால், அவரை போலீஸார் எந்த வழக்குக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்பதைக் கேட்பதற்காக, ஜோதிமுருகன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால், அவரால் சகோதரரைச் சந்திக்க முடியவில்லை. அத்துடன், வழக்கு தொடர்பான விவரத்தையும் தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். அதனால் ஏமாற்றம் அடைந்த ஜோதிமுருகன் அங்கிருந்து வெளியேறினார். 

ஜோதிமுருகன்

அப்போது அவர், காவல் நிலையம் முன்பாக டிக்டாக் செய்துள்ளார். ’’சட்டப்படி பார்த்தா நான் குற்றவாளி தாண்டா.. நியாயப்படி பார்த்தா நான் சுத்தத்தங்கம் தாண்டா...’’ என்கிற பாடலுக்கு மீசையை முறுக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை டிக்டாக் செயலி மூலம் பதிவேற்றம் செய்திருக்கிறார். அது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், ஜோதிமுருகனைக் கைதுசெய்தனர். 

நெல்லை மாவட்டத்தில் டிக்டாக் பதிவுக்காகக் கைதாகும் மூன்றாவது நபர் ஜோதிமுருகன். ஏற்கெனவே, ஆலங்குளம் காவல் நிலையம் முன்பாக டிக்டாக் பதிவுசெய்த இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close