` 8 தொகுதிகள்; யாருக்கெல்லாம் சீட்; தமிழக பா.ஜ.க! - பியூஷ் கோயல் வருகையின் பின்னணி | parliament election alliance talk between admk, bjp

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (15/02/2019)

கடைசி தொடர்பு:13:52 (15/02/2019)

` 8 தொகுதிகள்; யாருக்கெல்லாம் சீட்; தமிழக பா.ஜ.க! - பியூஷ் கோயல் வருகையின் பின்னணி

`கூட்டணி வேண்டும்' என விரும்பியவர்கள் அமைதியாக இருந்தனர். `இந்தக் கூட்டணி வேண்டாம்' என நினைத்தவர்கள், வெளிப்படையாகவே பா.ஜ.க-வை விமர்சித்தனர். `வேண்டாம்' என்ற குரலைவிட மௌனமாக இருந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது.

` 8 தொகுதிகள்; யாருக்கெல்லாம் சீட்; தமிழக பா.ஜ.க! - பியூஷ் கோயல் வருகையின் பின்னணி

த்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் நேற்று நடத்திய சந்திப்பின் மூலம், உற்சாகத்தில் இருக்கிறது தமிழக பா.ஜ.க. `2014 நாடாளுமன்றத் தேர்தலைப் போல் அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் கோயல் நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கு வந்தார். பா.ஜ.க-வைச் சார்ந்துள்ள சிறிய கட்சிகளுக்கும் சேர்த்து 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்துப் பேசப்பட்டு வந்த தகவல்கள், இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன. `கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகும் கட்சிகள் எவை, எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள்?' என்பதைப் பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அமைச்சர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில், எந்தெந்த தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு என அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியானது. இந்தநிலையில், நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் வருகை, கூட்டணி உடன்பாட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறது. 

தமிழிசை, பியூஷ் கோயல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சென்றார் பியூஷ் கோயல். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள், சிறிய கட்சிகள் வேண்டுகோள் வைத்திருந்த தொகுதிகள் ஆகியவை குறித்தும் விவாதித்தனர். இதுதொடர்பாகப் பேட்டியளித்த பியூஷ் கோயல், `பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்தது. நாட்டின் இளைஞர்கள், பெண்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க பிரதமர் விரும்புகிறார். அதற்கு, மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கவும், தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கவும் தங்கள் பிரதிநிதிகளை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்' எனக் குறிப்பிட்டார். 

பியூஷ் கோயல்

பியூஷ் கோயலின் வருகை குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் ஒருவர், ``அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதி செய்து நீண்ட நாள்களாகிவிட்டன. தொகுதிப் பங்கீடுகளும் முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருக்கிறார். தொகுதி உடன்பாட்டின்படி பா.ஜ.க-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இதில், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுக்கு பா.ஜ.க சீட் ஒதுக்கும் என்பதால், நாங்கள் 5 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பத்து நாள்களுக்கு முன்பே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்ததன் பின்னணியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, மத்திய இணை அமைச்சர் பொன்னார், தமிழக தலைவர் தமிழிசை ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்தக் கூட்டணி தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க பிரமுகர் ஒருவரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், `நம்முடைய கூட்டணியில் யார் யார் இருந்தால் நன்றாக இருக்கும், தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி?' என விசாரித்தார். அதன் அடிப்படையில் சொல்லப்பட்ட விஷயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டார். சில கட்சிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்" என்றவர், 

தமிழிசை

``பா.ஜ.க-வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் மேலிடம் உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழகத் தலைவர்களை பா.ஜ.க மேலிடம் நம்பவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 2014 தேர்தலில் முறையாகக் கிடைக்க வேண்டிய தொகுதிகளை தமிழக தலைவர்கள் கேட்டுப் பெறவில்லை. தவிர, யாருக்கு எந்தத் தொகுதி என்பதை சரியான நேரத்தில் அறிவிக்காததால் தோல்வி ஏற்பட்டது. அப்போது தலைவராக இருந்த பொன்னார், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதில்தான் அக்கறை காட்டினாரே தவிர, கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், `மற்றவர்களுக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது' என்பதற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்கு நல்ல தொகுதிகளை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டனர். 

எடப்பாடி பழனிசாமி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியை வானதிக்குக் கொடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தே.மு.தி.க-வுக்குத் தேவையில்லாமல் கொடுத்தனர். வேலூர் தொகுதி கடைசிநேரத்தில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஒதுக்கப்பட்டது. முன்கூட்டியே ஒதுக்கியிருந்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளாவது வந்திருக்கும். பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சிக்கும் அதேபோல்தான் ஒதுக்கப்பட்டது. இந்தக் குளறுபடிகளுக்கு மாநில தலைமைதான் காரணம் என டெல்லிக்குப் புகார் மனுக்களை அனுப்பினர். இந்தமுறையும் இதேபோன்ற வேலைகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இதையெல்லாம் அறிந்துதான், பேச்சுவார்த்தைக்கு நேரடியாகக் களமிறக்கப்பட்டார் பியூஸ் கோயல்" என்றார் அழுத்தமாக. 

கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள், ``கூட்டணி தொடர்பாக, பெரும்பான்மை கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. `கூட்டணி வேண்டும்' என விரும்பியவர்கள் அமைதியாக இருந்தனர். `இந்தக் கூட்டணி வேண்டாம்' என நினைத்தவர்கள், வெளிப்படையாகவே பா.ஜ.க-வை விமர்சித்தனர். `வேண்டாம்' என்ற குரலைவிட மௌனமாக இருந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. சொல்லப் போனால், ஓ.பி.எஸ் விருப்பப்படிதான் அனைத்தும் நடந்தது. கட்சி நிர்வாகிகளின் ஒத்தக் கருத்துக்கு உடன்பட்டுச் செயல்படுகிறார் முதல்வர்" என்கின்றனர் நிதானமாக.


[X] Close

[X] Close