`கிரண் பேடி புதுச்சேரிக்குள் நுழைய முடியாது!' - துணை ராணுவத்திடம் சீறிய அமைச்சர்கள் | Puducherry ministers got angry in Lt governor issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:15:20 (15/02/2019)

`கிரண் பேடி புதுச்சேரிக்குள் நுழைய முடியாது!' - துணை ராணுவத்திடம் சீறிய அமைச்சர்கள்

``எங்களைச் சீண்டினால் கிரண் பேடியால் புதுச்சேரிக்குள் நுழைய முடியாது” என்று துணை ராணுவப் படையினரிடம் அமைச்சர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக இன்று மூன்றாவது நாளாக தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன், ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் முதல்வர் நாராயணசாமி. அதைத் தொடர்ந்து காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருவதால் மத்தியப் படையை அனுப்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தார் கிரண் பேடி.

ஹெல்மெட்

அதனடிப்படையில் நேற்று காலை புதுச்சேரி வந்திறங்கிய அவர்கள், ஆளுநர் மாளிகை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு பாதுகாப்பு வளையத்தையும் பலப்படுத்தினர். நேற்று அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டிய பின்னரும் மத்தியப் படையினர் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள்

போராட்டக் களத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகளை அவர்கள் விதித்து வருகின்றனர். முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் இரவில் அங்கேயே தரையில் படுத்து உறங்கி வருகின்றனர். குளிப்பதற்கு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள சட்டப்பேரவைக்குச் சென்று வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை

அப்படி சென்று வரும் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் துணை ராணுவப் படையினர் நீண்ட நேர கெடுபிடிகளுக்குப் பிறகே அனுமதிக்கின்றனர். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் போன்றவர்களை இன்று காலை அனுமதிக்கவில்லை.

ஆளுநர்

அப்போது ``நாங்கள்  மிகவும் அமைதியாக அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் கிரண் பேடி புதுச்சேரிக்குள் நுழைய முடியாது” என்று அமைச்சர்கள் தரப்பில் ஆவேசமாகப் பேசினர். நிலமையை உணர்ந்து அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close