அரசு பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா..? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நியமன சர்ச்சை! | Annamalai University teacher recruitment issue is still continuing

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:05 (15/02/2019)

அரசு பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா..? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நியமன சர்ச்சை!

பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், 21 பல்கலைக்கழகங்களுக்குச் சேர்த்து 57 சதவிகிதத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு மட்டும் 43 சதவிகிதத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

அரசு பல்கலைக்கழகமா, தனியார் பல்கலைக்கழகமா..? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நியமன சர்ச்சை!

ண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களை அரசுக் கல்லூரிகளில் பணி நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், கெளரவ விரிவுரையாளர்கள். இதுகுறித்து, தமிழக ஆளுநருக்கும் உயர்கல்வித் துறைச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். `அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசுப் பல்கலைக்கழகமா... தனியார் பல்கலைக்கழகமா?' என்பது குறித்தும், பணியாளர்கள் நியமனங்கள் குறித்தும் சர்ச்சைகள் நீண்டகாலமாக தொடர்ந்துவருகின்றன. 

நிர்வாகச் சீர்கேட்டால் தன் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் தத்தளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, அரசு ஏற்று நடத்துவதாக 2013-ம் ஆண்டு அறிவித்தது. மாணவர்களைவிட அதிகமான அளவில் ஆசிரியர்கள் இருந்ததால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் பணியாளர்களையும் இதர அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றிவருகிறது தமிழக அரசு. 

ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு, மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துவருகிறது கல்லூரிக் கல்வி இயக்ககம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசுக் கல்வி நிறுவனங்களில் பணியமர்த்தவும், பணி நீட்டிக்கவும் செய்யக் கூடாது என நெட்-செட் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆளுநருக்கும் தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில், `அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணி (Teaching Posts) இடங்கள் 860. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக 3,896 பணியிடங்கள் வரை நிரப்பப்பட்டன. இதைப்போலவே, அலுவலகப் (Non -Teaching Posts) பணியிடங்கள் 1,110. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக 9,434 பணியிடங்கள் வரை நிரப்பப்பட்டன. 

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளில், சிறப்பு அலுவலர் என்ற பணி இடம் இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழக விதிமுறைகளுக்குப் புறம்பாக, ஆயிரக்கணக்கான சிறப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்துக்கு அதிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியிலிருந்தே ஊதியம் வழங்கப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அரசு நிதி ஒதுக்கீட்டில், 21 பல்கலைக்கழகங்களுக்குச் சேர்த்து 57 சதவிகிதத்தையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் 43 சதவிகிதத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இதனால், அரசுப் பல்கலைக்கழகங்கள் போதுமான நிதி இல்லாமல் முடங்கும் நிலையில் உள்ளன. இதனால், `அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாகப் பணி நியமனங்களைப் பெற்றவர்கள் எல்லோரும், பாதுகாப்பாக பணி மாறுதல் பெற்றுவருவதைத் தடுக்க வேண்டும். இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உதயச்சந்திரன்இதுகுறித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் உதயச்சந்திரனிடம் பேசினோம்.

``அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1929-ம் ஆண்டு முதலே அரசு நிதியுதவியுடன்தான் இயங்கிவருகிறது. இதனால், இது தனியார் பல்கலைக்கழகம் என்று சொல்லப்படுவது தவறு. பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதற்காக, கெளரவப் பதவியாக இணைவேந்தர் பதவி மட்டுமே அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வகித்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நியமனமும் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகிறது.

2009-ம் ஆண்டுக்குப் பிறகே, பல்கலைக்கழக நியமனங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கு முன்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருந்தால் போதுமானது. பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கலாம் என்று விதிமுறை இருந்தது. மேலும், அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மாணவர்கள் படித்தார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்களை குறை சொல்லக் கூடாது" என்றார்.

தங்க முனியாண்டிநெட்-செட் சங்கத்தின் செயலாளர் தங்க முனியாண்டி, ``அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், முன்னாள் பதிவாளர் ரத்தின சபாபதி ஆகியோர் மீது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த ஆண்டு வழக்கு பதிவுசெய்தது. இதில் முறைகேடாகப் பணி நியமனங்கள் நடந்துள்ளன என்று முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் பணி நீட்டிப்பை வழங்குவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனமே அரசியல் செல்வாக்கோடு நியமிக்கப்படும்போது, சிண்டிகேட் வழிகாட்டுதல் எப்படி இருக்கும் என்பது எல்லோரும் தெரிந்த விஷயமே. மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்பட்டிருந்தால், எதற்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்?" என்றார்.

தமிழக அரசு, 2013-ம் ஆண்டு அரசுக் கல்லூரியில் காலியாக உள்ள 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. ஆனால், இதுவரை அரசுக் கல்லூரியில் காலி இடங்களாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், கெளரவ விரிவுரையாளர்களைக்கொண்டும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தும் அரசுக் கல்லூரிகளை நடத்திவருகிறது தமிழக அரசு.

உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே அதிகளவில் சேர்க்கைகொண்டுள்ள மாநிலம் என்று வெறும் சாதனையாகச் சொல்லாமல், உயர்கல்வித் துறையில் படித்த இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறோம் என்று  தமிழக அரசு சாதனையாகச் சொல்லும்போது மட்டுமே தமிழகம் தலை நிமிர முடியும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close