சைலன்ட் ஒலிம்பியாட்டில் 21 பதக்கம் வென்ற குழந்தைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு! | Tamilnadu sports department didn't celebrate the kids who won medals in the Silent Olympiad

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:43 (15/02/2019)

சைலன்ட் ஒலிம்பியாட்டில் 21 பதக்கம் வென்ற குழந்தைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு!

"உண்மையைச் சொல்லணும்னா, ஒரு நாள் கூட, இவங்க யாரும் எனக்கு உடம்புக்கு முடியலைன்னு எக்ஸ்க்யூஸ் கேட்டு வந்தது கிடையாது. எல்லோரும் ஷார்ப்பா 5 மணிக்கு ஆஜர் ஆகி தனக்கு உரிய பயிற்சிகளை செய்ய ஆரம்பிச்சுருவாங்க. அந்த ஆர்வம்தான் அடுத்தடுத்த கட்ட வெற்றிக்கு இவர்களை அழைத்துச் செல்கிறது."

சைலன்ட் ஒலிம்பியாட்டில் 21 பதக்கம் வென்ற குழந்தைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு!

தேசிய அளவில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான `சைலன்ட் ஒலிம்பியாடு’ கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக சிவகாசி சி.எஸ்.ஐ செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு 10 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களைக் குவித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் கிறிஸ்டோபரை தொடர்பு கொண்டோம்.

``இந்தக் குழந்தைங்க மனசுல எந்தக் குறையும் கிடையாது. அவங்க உடல் குறைகளைப் போக்க, தனக்கு விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டி தனக்கான அடையாளத்தைத் தக்க வைச்சுகிறாங்க. சொல்லப்போனா இந்தக் குழந்தைகளோட பெற்றோர்களால் சொந்த வீட்டிலேயே புறக்கணிக்கப்படும் இவர்களுக்கு இவங்களோட தன்னம்பிக்கைதான் இவங்க அடையாளம் எனத் தன்னைச் சுற்றி நிற்கும் மாணவர்களுக்குச் சைகை மொழியில் தன்னம்பிக்கை விதைத்துப் பேச ஆரம்பிக்கிறார் கிறிஸ்டோபர்." 

``இங்க இருக்க நிறைய குழந்தைகளுடைய பெற்றோர்கள் கூலி வேலைக்குத் தொழிற்சாலைக்குச் செல்பவர்கள். பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அதிகம். அவங்களைப் பொறுத்தவரை  பெற்றோர்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்காகப் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகக்கூடியவர்கள். அவங்களைப் பொறுத்தவரை தன்னுடைய பிள்ளையை ஸ்கூலில் சேர்த்ததே சாதனைதான். ஆனால், இது போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் படிப்பைத் தாண்டி ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா ஸ்கில் இருக்கும். படிப்பைவிட அந்த ஸ்கில்தான் அவர்களின் ஆர்வமாக இருக்கும். ஆனால், அதை வெளியே கொண்டு வரக் கொஞ்சம் கஷ்டப்படணும். அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியின் போது நிறைய செலவாகும். அதனால் பெற்றோர்கள் அதில் கவனம் செலுத்த மாட்டாங்க. ஆசிரியர்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமையைக் கண்டு பிடித்துச் சொன்னால் கூட, 'எங்க புள்ள படிச்சா போதும். எதுக்கு இதெல்லாம்ன்னு சொல்லுவாங்க!' இந்த எண்ணத்தை உடைச்சு அவங்க குழந்தைகளை அவங்களுக்குப் புரிய வைக்கவே நிறைய போராடியிருக்கேன். பெற்றோர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல், கிடைக்கும் உதவிகள் மூலம் நேஷனல் பிளேயர்கள் ஆன குழந்தைகள்தான் இங்க ஏராளம்" எனத் தன் முயற்சிகளை வார்த்தையில் கடத்துகிறார் கிறிஸ்டோபர்

மாற்றுத்திறனாளி - சைலன்ட் ஒலிம்பியாட்

``நான் இந்தப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருச்சு. வேலைக்குச் சேர்ந்த புதிதில் விளையாட்டு தொடர்பான அடிப்படை வசதிகள் கூட கிடையாது. மாணவர்கள் ஷூ கூட இல்லாமல் பிராக்டிஸ் பண்ணுவாங்க. ஆனால் ஒவ்வொரு மாணவருக்குள்ளும் யுனிக்கான சில திறமைகள் இருந்ததை உணர முடிந்தது. அந்தத் திறமையை வெளியே கொண்டு வர எங்கள் பள்ளியில் முடிவு எடுத்தோம். தினமும் காலையில் 5 மணிக்கு மாணவர்களுடைய விளையாட்டுக்குப் பயிற்சி வழங்க ஆரம்பிச்சேன். மாணவர்களைப் புரிந்து கொள்ளுவது, மாணவர்களை ஒருங்கிணைப்பது, ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷலான பயிற்சிகள் வழங்குவதுனு நிறைய தடுமாற்றங்கள் இருந்தது. ஆனால் தொடர் பயிற்சியின் மூலமாக 2015-ம் ஆண்டு நடந்த சைலன்ட் ஒலிம்பிக்கில் எங்கள் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று இந்தியாவிற்காகப் பரிசுகளை குவித்தனர். அதன் பின்தான் சமுதாயத்தின் வெளிச்சம் இவர்களின் மீது பட ஆரம்பித்தது. தங்கள் குழந்தைகளின் போட்டோக்களை நியூஸ் பேப்பரில் பார்த்த இவர்களின் பெற்றோர்கள், கண்ணீருடன் இவர்களைக் கட்டி அணைச்சதுதான் இவங்களுக்கான அடையாளம்.

ஒலிம்பிக் வெற்றிக்குப் பின், இந்தக் குழந்தைகளின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிறைய பேர் உதவ ஆரம்பிச்சாங்க. கிடைத்த உதவிகளைப் பயன்படுத்தி, விளையாட்டு மைதானத்தைச் சீர் அமைச்சது, பசங்களுக்குத் தேவையான ஷூ, எக்யூப்மென்ட்ஸ் வாங்குவது என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டோம். தேசிய அளவிலான போட்டிகளுக்கு அதிகளவு பயிற்சி தேவை என்பதால் இன்றும் காலை 5 மணி பயிற்சிகள் தொடர்கின்றன. உண்மையைச் சொல்லணும்னா, ஒரு நாள் கூட, இவங்க யாரும் எனக்கு உடம்புக்கு முடியலைன்னு எக்ஸ்க்யூஸ் கேட்டு வந்தது கிடையாது. எல்லோரும் ஷார்ப்பா 5 மணிக்கு ஆஜர் ஆகி தனக்கு உரிய பயிற்சிகளை செய்ய ஆரம்பிச்சுருவாங்க. அந்த ஆர்வம்தான் அடுத்தடுத்த கட்ட வெற்றிக்கு இவர்களை அழைத்துச் செல்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் மும்பையில் நடந்த சைலன்ட் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டார்கள். 16 மாணவர்கள், 13 மாணவிகள் என 29 மாணவர்கள் கலந்து கொண்டதில் 21 பதக்கங்கள் குவித்து தமிழ்நாட்டிற்குப் பெருமைசேர்த்தனர். எத்தனையோ பதக்கங்களை இவங்க ஜெயிச்சாலும், விளையாட்டுத்துறை சார்பாக அரசிடமிருந்து எந்த உதவியும், அங்கீகாரமும் கிடைக்கிறது இல்ல என்பதுதான் வேதனை தருகிறது. ஸ்கூலில் படிக்கும் வரை விளையாட்டு சார்பான இவர்களின் எல்லாத் தேவைகளையும் வெளியிலிருந்து கிடைக்கும் உதவிகள் மூலமும், பள்ளி நிர்வாகத்தின் மூலமும் பள்ளியே செய்து விடுகிறது. பள்ளிப் படிப்புக்குப் பின் அடுத்தகட்ட முன்னேற்றமும் வாய்ப்பும் இல்லாமல், எதிர்காலத்தை மட்டுமல்ல விளையாட்டையும் தொலைக்கும் இது போன்ற விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு அரசுதான் உதவணும்" என்கிறார் வேதனையுடன். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close