திருக்குறுங்குடி நம்பிகோயில் வனப்பகுதியில் மான் கொம்புடன் போலீஸார்! - வைரலாகும் புகைப்படம் | nellai police personals took photo with deer antlers are gone viral

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (15/02/2019)

திருக்குறுங்குடி நம்பிகோயில் வனப்பகுதியில் மான் கொம்புடன் போலீஸார்! - வைரலாகும் புகைப்படம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பிகோயில் வனப்பகுதியில் மான் கொம்புகளுடன் போலீஸார் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மான் கொம்பு புகைப்படம்

நெல்லை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே நம்பியாறு ஓடுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். இது தவிர, தமிழ் மாதங்களின் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால் அதிலும் பக்தர்கள் அதிகமாகப் பங்கேற்பார்கள். 

திருமலைநம்பி கோயில், அமைந்துள்ள வனப்பகுதியில் திருக்குறுங்குடி ஜீயர் மடத்துக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அதனால் கோயிலின் வழிபாட்டுத் தினங்கள் தவிர பிற நாள்களின்போது வனப்பகுதிக்குச் செல்ல வேண்டுமானால், ஜீயர் மடம் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் அப்பகுதிக்குச் செல்ல முடியாது. அதனால் சாமானிய மக்கள் வனப்பகுதிக்குள் செல்வதில்லை. அதை மீறிச் சென்றால் வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருக்குறுங்குடி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டரான மகேந்திரன் தலைமையில் காவலர்கள் சிலர், வனப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்த அவர்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அப்போது ஒருவரை மான் போல குனிந்து நிற்க வைத்த எஸ்.ஐ மகேந்திரன், அந்த போலீஸின் முதுகில் அமர்ந்து மான் கொம்பைப் பிடித்திருப்பது போலப் புகைப்படம் எடுத்திருக்கிறார். 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மான் கொம்பைக் கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்பட ஆதாரம் இருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யான மகேந்திரன் ஏற்கெனவே குமரி மாவட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

வனப்பகுதிக்குள் வனத்துறையின் சார்பாக வைக்கப்பட்ட தானியங்கி கேமராக்கள் சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போனதாகப் புகார் வந்தது. அது குறித்து விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ மகேந்திரன் தலைமையிலான போலீஸார், அருவியில் குளித்துவிட்டு உற்சாகம் மிகுதியால் இது போன்ற புகைப்படத்தை எடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் புகைப்பட விவகாரம் வைரலானதால், காவல்துறையின் சார்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதனால் திருக்குறுங்குடி காவல்நிலையத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். 


[X] Close

[X] Close