`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்!'- குடும்பத்தினர் கண்ணீர் | Ariyalur CRPF Solider died in pulawama terrorist attack

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (15/02/2019)

கடைசி தொடர்பு:15:39 (17/02/2019)

`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்!'- குடும்பத்தினர் கண்ணீர்

சிவசந்திரன் மனைவி, மகன் மற்றும் அம்மாவோடு

காஷ்மீரில் நேற்று நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பதற வைத்திருக்கிறது. பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணின், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் என்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள். இருவரும் குண்டுவெடிப்பில் பலியாகிய தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தேசமே துயரில் ஆழ்ந்திருக்கும்போது இன்னும் சிவசந்திரனின் மனைவிக்கு மட்டும் தகவல் கொடுக்கப்படவில்லை என்கிறார் உறவினர் ஒருவர். 

வீரர் சிவசந்திரன்

``சிவசந்திரன் என்னோட தாய்மாமாதான். கல்யாணம் முடிஞ்சு 2 வயசுல ஒரு பையன் இருக்கான். அவங்க மனைவி பேரு காந்திமதி. பையன் சிவ முனியன். இப்போ காந்திமதி நாலு மாத கர்ப்பிணியா இருக்காங்க. இந்த நேரத்துல இந்தத் தகவலை அவங்ககிட்ட எப்படிச் சொல்லுறதுன்னு தெரியாம நாங்க எல்லோரும் பதறிக்கிட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாம, மாமா அவரு குடும்பத்துல உள்ளவங்க மேல ரொம்ப பாசமா இருப்பாரு. விவசாயம் பண்ணித்தான் அவரை வளர்த்து ஆளாக்கினாங்க. லீவுக்கு வந்துட்டு போன சனிக்கிழமைத்தான் திரும்ப வேலைக்குக் கிளம்பிப் போனாரு. அதுக்குள்ள இந்த மாதிரி ஆகிடுச்சு. நேத்தே அரசல் புரசலா தகவல் வந்துடுச்சு. ஆனாலும் உறுதியா தெரிஞ்சுக்காம நாங்க எப்புடி அவங்ககிட்ட சொல்ல முடியும்னு அமைதியா இருந்தோம். இப்போ நியூஸ்லயும் அவரு இறந்துட்டார்னு உறுதியா சொல்லிட்டாங்க. கடவுளே மாமா இறந்து போன தகவலை அத்தை எப்படி எடுத்துக்க போறாங்கன்னு தெரியலையே” என்கிறார் அழுதபடியே. 

அவரின் அழுகுரல் நம் நெஞ்சில் இடியாய் வந்து விழுகிறது. 


[X] Close

[X] Close