` ஆளுநர் அமைதிக்கான காரணம் முதல்வருக்கே தெரியவில்லை!' - நளினி வழக்கறிஞர் பேட்டி | Even CM EPS didn't know the reason behind governor's silence over pre release of Rajiv murder case convicts, says Nalini's lawyer

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (15/02/2019)

` ஆளுநர் அமைதிக்கான காரணம் முதல்வருக்கே தெரியவில்லை!' - நளினி வழக்கறிஞர் பேட்டி

ஏழுபேர்  விடுதலைக் குறித்து  எடப்பாடி பழனிசாமி


``ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம்  கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த  ஆண்டு செப்டம்பர்  9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர்.  

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் தன் மகனை விடுவிக்கக்கோரி நடைப்பயணம் மேற்கொண்டார். தற்போது சிறையில் உள்ள நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசியபோது, ``ஏழு பேர் விடுதலைக் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசினோம். அதற்கு அவர், `இது குறித்து ஏற்கெனவே ஆளுநரிடம் பேசிவிட்டோம்' என்று கூறியுள்ளார். 

மறைந்த எங்கள் தலைவர் ஜெயலலிதா நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைதான் நாங்கள் தற்போது செயல்படுத்த முயன்று வருகிறோம். அந்தச் செயலில் தோல்வி ஏற்பட்டால் எங்களுடைய கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது அல்ல. எனவே, அந்தத் தீர்மானத்தின் மீது நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதையெல்லாம் கேட்டுக்கொண்டார். ஆனால், இன்னும் எந்த முடிவும் எடுக்காமல்  அமைதிகாத்து வருவதுதான் ஏன் எனத் தெரியவில்லை' என்று முதலமைச்சர் தரப்பில் இருந்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது . முதலமைச்சரின் இப்படியான பதிலைத் தொடர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறோம். விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


[X] Close

[X] Close