`குடும்பத்தை தாங்கி வந்தான், இறந்துட்டானே!'- கதறும் அரியலூர் சிவசந்திரனின் நண்பன் | CRPF solider Ariyalur Sivachandran's friend shares his grief over his death

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (15/02/2019)

கடைசி தொடர்பு:16:05 (15/02/2019)

`குடும்பத்தை தாங்கி வந்தான், இறந்துட்டானே!'- கதறும் அரியலூர் சிவசந்திரனின் நண்பன்

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் என்பவர் உயிரிழந்த சம்பவத்தால் அரியலூர் மாவட்டமே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

சிவசந்திரன்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரையிலும் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் என்பவரும் இதில் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது.

ராணுவ உடையில் சிவசந்திரன்

இதனால் இரண்டு வீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வீரர்களின் உடல்கள் எப்போது வரும் என்ற தகவலை எதிர்பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காத்திருக்கின்றனர். உடல்கள் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

சிவசந்திரனுடன் சகவீரர்கள்

சிவசந்திரனின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ``என் நண்பன் ராணுவ வீரனாக ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவில் இருந்தான். அந்த முடிவுதான் அவனை ராணுவ வீரராக்கியது. ஆனால், அவன் இறந்துவிட்டான் என்று சொல்லும்போது எங்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் குடும்பத்தில் மூன்று பேர்கள். அவனின் அண்ணன் கடந்த வருடம் மின்சாரம் தாக்கி இறந்தான். அக்காவும் உடல்நிலை சரியில்லாதவர். இப்படி இருக்கும் சூழலில் என் நண்பன்தான் குடும்பத்தைப் பாதுகாத்து வந்தான். தற்பொழுது அவனும் இறந்துவிட்டான் என்று சொல்லும்போது எங்களின் மனம் கலங்குகிறது. அந்தக் குடும்பமே நிலைகுலைந்து நடுத்தெருவில் நிற்கிறது. இனியும் என் நண்பனுக்கு ஏற்பட்டதுபோல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. என் நண்பனைக் கொன்ற தீவிரவாத குழுக்களுக்கு நம் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும்" என்று தழுதழுத்தனர்.


[X] Close

[X] Close