கிரண்பேடிக்கு எதிராக வெளியிடப்பட்ட 2 புகைப்படங்கள்! | Puducherry people raises questions to Lt Governor Kiran bedi over without helmet riding

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (15/02/2019)

கிரண்பேடிக்கு எதிராக வெளியிடப்பட்ட 2 புகைப்படங்கள்!

``ஹெல்மெட் விஷயத்துல ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?” என்று கிரண் பேடியிடம் புதுச்சேரி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிரண் பேடி

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் எனக் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தச் சட்டம் தளர்த்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஹெல்மெட்

அதன்படி கடந்த (11.02.2019) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், கார் ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவித்த டி.ஜி.பி சுந்தரிநந்தா, அதை மீறுபவர்களுக்கு முதல் இரண்டு முறை அபராதம் விதிக்கப்படும் என்றும் மூன்றாவது முறை லைசென்ஸ் பறிக்கப்படும் என்றும் கூறினார். இந்த உத்தரவு காவல்துறையினருக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 30,000 பேர்களின் வாகன எண்கள் குறிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்துக் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

சீட் பெல்ட்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் புதுச்சேரி முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல முதல்வர் நாராயணசாமி தன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் மத்தியப் படையினரின் உதவியுடன் ஆளுநர் கிரண்பேடி காரில் வெளியேறும் புகைப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், “போக்குவரத்துச் சட்டத்தை செயல்படுத்துகிறேன் என்று சொல்லும் ஆளுநர் கிரண்பேடி ஏன் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்கிறார். ஒரு வாதத்துக்கு பின்னால் அமர்ந்திருப்பவர் சீட் பெல்ட் அணிய வேண்டாம் என்று வைத்துக்கொண்டாலும், முன் சீட்டில் அமர்ந்து இருக்கும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியும், ஓட்டுநரும் சீட் பெல்ட் அணியாமல் செல்கின்றனர். அவர்களை சீட் பெல்ட் அணியும்படி கிரண் பேடி ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆளுநர்

அதேபோல கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்வையிட, ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஷா குப்தாவுடன் இரவில் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியை சுற்றி வந்தார் ஆளுநர் கிரண்பேடி. அந்தப் புகைப்படத்தை கிரண் பேடியே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தை இப்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு “ஹெல்மெட் அவசியம் என்று எங்களுக்குச் சொல்லும் நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close