`சார், கறுப்புப் பணத்துடன் கார் வருது, பிடிங்க!'- பெரம்பலூர் போலீஸை தெறிக்கவிட்ட போன்கால் | Perambalur police got Unanimous call over black money

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (15/02/2019)

`சார், கறுப்புப் பணத்துடன் கார் வருது, பிடிங்க!'- பெரம்பலூர் போலீஸை தெறிக்கவிட்ட போன்கால்

``கறுப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு கறுப்பு நிறக்கார் கார் ஒன்று பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அதைப்பிடியுங்கள்" என்று மர்ம நபரின் போனால் பெரம்பலூர் போலீஸார் உஷாரானார்கள். 

                                                    

பெரம்பலூர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில்,``ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் கறுப்புநிறக் காரில் பலகோடி மதிப்பிலான கறுப்புப் பணத்தைக் கடத்தி வருகிறார்கள். அந்தக் கார் தற்போது பெரம்பலூர் மாவட்ட எல்லையில் நுழையப் போகிறது, அதை உடனே பிடியுங்கள்" என்று வண்டி நம்பரைச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்திருக்கிறார் அந்த மர்ம நபர். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி திஷாமித்தல் உத்தரவின்பேரில், பெரம்பலூர் டி.எஸ்.பி ரவீந்திரன் தலைமையில் நான்குரோடு பகுதியில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

                                               
அதே மர்ம நபர் மீண்டும் போன் செய்து அந்தக் கார் நான்கு ரோடு பகுதியைக் கடந்துவிட்டது என்றும் தகவல் சொல்லியிருக்கிறார். உஷாரான காவலர்கள் மங்களமேடு டி.எஸ்.பி தேவராஜிக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு ரவீந்திரன் ஸ்பெஷல் டீம் போலீஸாருடன் மங்களமேடு பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கு டி.எஸ்.பி தேவராஜ் திருமாந்துறை டோல் பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த அடையாளங்களுடன் வந்த கறுப்புநிறக் காரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, காரில் தொழிலதிபரான அலாவுதீன் மற்றும் அவரின் நண்பர்கள் மரக்காயர், அபுபக்கர் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் ராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கி காரில் செல்வதாகக் கூறியிருக்கின்றனர்.

பின்பு போலீஸார், காரை அங்கேயே நிறுத்தி சோதனை போட்டுள்ளனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. பின்பு அவர்களிடம், போலீஸார் தொடர்ந்து கேள்விகேட்டு துளைத்திருக்கின்றனர். பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை வாங்கிவிட்டு காரை விடுவித்துள்ளனர். தற்போது போன் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்படம்போல் தத்துரூபமாம பெரம்பலூர் போலீஸாரை மர்ம நபர் ஏமாற்றிய செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close