`என் குடும்பத்து குலசாமி எங்கள விட்டுப் போயிட்டான்!'- சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர் | CRPF confirms thoothukudi solider subramaniyan's death in Pulawama terror attack

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:17 (15/02/2019)

`என் குடும்பத்து குலசாமி எங்கள விட்டுப் போயிட்டான்!'- சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர்

காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் கோவில்பட்டி அருகே உள்ள சவலாபேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியனின் மரணம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர் பயின்ற பள்ளியில் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மனைவியுடன் சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள சவலாபேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (28). ஐ.டி.ஐ., படித்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எஃப்.  பணியில் சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் தனது பணியைத் தொடங்கி, தொடர்ந்து  சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்தாண்டு தலைப் பொங்கல் என்பதால் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவிகள்

தன் மனைவி கிருஷ்ணவேணியுடன் தலைப்பொங்கல் கொண்டாடி பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஊரிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார் சுப்பிரமணியன். நேற்று மதியம் 2 மணியளவில் தன் மனைவிக்கு போன் செய்து தான் பணிக்குச் செல்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில், தற்கொலைப் படைத்தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து இன்று மதியம் வரை அவரது வீட்டினர் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், தமிழக அரசு சுப்பிரமணியன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அக்கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

சுப்பிரமணியனின் தந்தை கணபதி (நடுவில் இருப்பவர்)

சுப்பிரமணியனின் தந்தை கணபதி பேசுகையில், ``போலீஸ் வேலையில் சேரணும், ராணுவத்தில் சேரணும்னு சின்ன வயசுல இருந்தே சொல்லிக்கிட்டு இருப்பான். அதேபோல, சி.ஆர்.பி.எஃப். போலீஸில் சேர்ந்துட்டான். பொங்கல் லீவுக்கு வந்தவன் போன வாரம்தான் வேலைக்குப் போனான். பொங்கல் லீவு முடியுறதுக்குள்ள எனக்கு கண் ஆபரேஷன் செய்யணும்னு சொல்லி ஆபரேசனும் செஞ்சுட்டுப் போனான். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. என் குடும்பத்துக்கு குலசாமியா இருந்தவன் எங்களை விட்டுட்டுப் போயிட்டான்” என்றார் கண்ணீருடன். இதற்கிடையில் சுப்பிரமணியன் ஆரம்பக்கல்வி பயின்ற அதே கிராமத்தில் உள்ள டி.என்.டி.டி.ஏ. ஆரம்பப் பள்ளியில் அவரது மறைவுக்கு மாணவ மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close