`தனிநபரின் ஆதாயத்துக்காகப் பேருந்து நிலையம் இடமாற்றம்!’ - அமைச்சர் வீரமணி மீது தினகரன் தாக்கு | TTV Dinakaran slams minister Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (15/02/2019)

`தனிநபரின் ஆதாயத்துக்காகப் பேருந்து நிலையம் இடமாற்றம்!’ - அமைச்சர் வீரமணி மீது தினகரன் தாக்கு

பேரணாம்பட்டு நகரில் உள்ள பேருந்து நிலையத்தை, தனிநபரின் ஆதாயத்துக்காக வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி முக்கியத்துவம் தருவதாக டி.டி.வி.தினகரன் கடுமையாக சாடியிருக்கிறார்.

அமைச்சர் கே.சி.வீரமணி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பேருந்து நிலையம், பல ஆண்டுகளாக நகரின் மையப்பகுதியில் இயங்கிவருகிறது. அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பாகவும், வசதி நிறைந்ததாகவும் உள்ள இந்தப் பேருந்து நிலையத்தை, பேரணாம்பட்டு நகருக்கு வெளியே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்கிறது. தனிநபர் ஒருவர் ஆதாயம் தேடுவதற்காக தானமாக இடத்தைக் கொடுப்பதால், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், பேருந்து நிலைய விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் தருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கை

பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தும், பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி, பேருந்து நிலையம் மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போராட்டக் குழுவினர் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி 21 முறை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் விடாப்பிடியாகச் செயல்படுத்த முனைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது, பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தால், எவ்வித இடையூறும் இல்லை. ஆனால், மக்கள் நலனை மறந்துவிட்டுத் தனிப்பட்ட நபர்களின் பேராசையை பூர்த்தி செய்யப் பார்க்கின்றனர். இந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

``அறிக்கையில், பெயர் குறிப்பிடாமல் அமைச்சர் என்று தினகரன் சாடியிருப்பது, வேறு யாருமில்லை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியை தான்’’ என்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.


[X] Close

[X] Close