விஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு! | Piyush Goel Plans to meet Vijayakanthi over parliament election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (15/02/2019)

கடைசி தொடர்பு:20:34 (15/02/2019)

விஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு!

விஜயகாந்த்

மிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமையப்போகும் கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வரும் வாரம் அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி தரப்பு அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்புகளை வெளியிடும் திட்டத்தில் உள்ளது. அ.தி.மு.க அணியில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளும் இணைய உள்ளது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த அணியில் இடம் பெறலாம் என்கிறார்கள். இந்த நிலையில், வியாழன் அன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகை தந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சென்றார். மீண்டும் சனிக்கிழமை அன்று பியூஷ் கோயல் தமிழகம் வர உள்ளார். 

பியூஷ் கோயல்

அன்றுதான் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தமிழகம் திரும்ப உள்ளார். தமிழகம் திரும்பிய விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் பியூஷ் கோயல் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, கூட்டணி குறித்தும் பேச உள்ளதாக பி.ஜே.பி தரப்பு சொல்கிறது. அ.தி.மு.க தரப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் நீங்களே பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று பியூஷ்கோயலிடம் சொல்லியிருப்பதால், பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி  குறித்தும் சீட் விவகாரம் குறித்தும் ஃபைனல் செய்யும் திட்டத்தில் கோயல் உள்ளார். விஜயகாந்த்துடன் சந்திப்பு சுமுகமாக முடிந்துவிட்டால் அடுத்த வாரமே தே.மு.தி.க எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்கிற முழுமையான அறிவிப்பை அந்தக் கட்சி அறிவித்துவிடும் என்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.