`தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டால் தோற்பார்!’ - அமைச்சர் கடம்பூர் ராஜு | kanimozhi can't win in thoothukudi constituency, says kadambur raju

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (15/02/2019)

`தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டால் தோற்பார்!’ - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க வெற்றியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தி.மு.க சார்பாக கனிமொழி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்தார். 

கடம்பூர் ராஜூ

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது தொடர்பான சாதனை மலர் வெளியிடப்பட்டது.

தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மாவின் வழியில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் குடிமராமத்துத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மன்னராட்சி காலத்தைப்போல இந்தக் குடிமராமத்துப் பணிகள் மூலம் மேட்டூர் அணையின் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன. 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜ.க-வுக்கு எதிராகக் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை தமிழக நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே அவர் நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் மத்திய அரசுக்கு எதிராக எதையும் பேசவில்லை. இது தொடர்பாக அவர் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டார். ஆனால், அவர் பேசிய விவகாரம் திரித்துக் கூறப்படுகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எடுக்கும் முடிவுகளை கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார். தி.மு.க சார்பாக கனிமொழியே தேர்தலில் போட்டியிட்டாலும் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற முடியாது. 

கடம்பூர் ராஜூ

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உடல் வரும்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதோடு முதல்வரின் உத்தரவுப்படி அரசின் உதவிகள் வழங்கப்படும். வரும் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க-வும் தனித்துப் போட்டியிடத் தயார் எனத் துணை முதல்வர் சட்டமன்றத்திலேயே தெரிவித்துவிட்டார்’’ எனத் தெரிவித்தார். 


[X] Close

[X] Close