``கரூரில் எனக்குதான் சீட் கிடைக்கும் என்பது கியாரண்டி கிடையாது!" - தம்பிதுரை திடீர் சரண்டர்! | ADMK MP Thambidurai speaks about parliament elections

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (16/02/2019)

``கரூரில் எனக்குதான் சீட் கிடைக்கும் என்பது கியாரண்டி கிடையாது!" - தம்பிதுரை திடீர் சரண்டர்!

தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜ.க-வுக்கு எதிராக தொடர் அட்டாக்கில் இறங்கினார். அ.தி.மு.க தலைமை அவரை ஆஃப் செய்ய, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தையான சின்னதம்பியை கரூர் தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்ட வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தம்பிதுரை திடீரென, ``கரூரில் எனக்கு சீட் கிடைக்கும் என்பது கியாரண்டி கிடையாது" என்று சரண்டர் அடைந்திருக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை, அதுவும் கடைசி இரண்டு முறையாக தொடர்ச்சியாக எம்.பியாக தம்பிதுரை இருக்கிறார்.

அ.தி.மு.க, பா.ஜ.க வரும் எம்.பி தேர்தலில் கூட்டணி வைக்க இருக்கும் நிலையில், நாடாளுமன்றம், பத்திரிகையாளர் சந்திப்புகள், கட்சி மேடை என்று எங்கும் பா.ஜ.வுக்கு எதிராக சூடான கருத்துகளை உதிர்த்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். `அது தம்பிதுரையின் தனிப்பட்டக் கருத்து' என்று அ.தி.மு.க தலைமை சமாளித்தாலும், நாளுக்கு நாள் தம்பிதுரையின் பா.ஜ.கவுக்கு எதிரான அட்டாக்  அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால், கடுப்பான பா.ஜ.க தலைமை, அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்தே, தம்பிதுரையின் வாயை அடைக்க, சி.விஜயபாஸ்கரின் தந்தையை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்ட வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கரூரில் இன்று பேட்டி கொடுத்த தம்பிதுரை, அதை உண்மை என்று நிரூபிப்பதைபோல, வழக்கத்துக்கு மாறாக நழுவல் பதில்களை உதிர்த்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டையூர் ஊராட்சி, நாகம்பள்ளி ஊராட்சி, புங்கம்பாடி கிழக்கு ஊராட்சி, வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் சீத்தப்பட்டி காலனியில் மக்களைச் சந்தித்து குறைகள் கேட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தம்பிதுரை...

அப்போது அவர், ``மக்களவைத் தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். நானும் விருப்ப மனு அளித்துள்ளேன். கரூர் தொகுதியில் எனக்கு தான் சீட்டு கிடைக்கும் என்பது கியாரண்டி கிடையாது. சுகாதாரத் துறை அமைச்சரின் தந்தைக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், அவரது வெற்றிக்குப் பாடுபடுவேன். இதில் கருத்து வேறுபாடு இல்லை.

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நான் இடம் பெறவில்லை. இதனால், கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது. அதேபோல், நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமையைக் காக்க குரல் எழுப்பினோம். அதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது" என்றார்.

அப்போது நிருபர்கள் அவரிடம், `திருப்பூரில் பிரதமர் மோடி பேசும்போது, `எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒரு கலப்பட கூட்டணி' என கூறினாரே?" என கேட்டபோது, ``தேர்தல் கூட்டணி என்றாலே கலப்படம்தான்" என்று மோடி கருத்தை ஆதரித்து பதில் அளித்தார். விடாத நிருபர்கள், `தமிழகத்தில் மோடி கலந்துகொண்ட இரண்டு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது குறித்து கேள்வி எழுப்பிய போது, ``இது மத்திய அரசு விழா, நீதிமன்றமே பதில் அளித்து விட்டது" என மழுப்பலாக பதில் அளித்தபடி பேட்டியை அத்தோடு முடித்துக் கொண்டார்.


[X] Close

[X] Close