முதலாளியின் குழந்தையைக் கொன்ற இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை | The Women who killed the boy has a double life sentence

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:02:00 (16/02/2019)

முதலாளியின் குழந்தையைக் கொன்ற இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வேலையில் இருந்து நீக்கிய கடை உரிமையாளரின் மகனைக் கொன்ற திருச்சி பெண் ரோஸ்லின் எனும் பெண்ணுக்கு திருச்சி நீதிமன்றம் இரட்டை ஆயுள் வழங்கி தீர்ப்பு.
 
திருச்சி
 
 
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களின் மகள் சிதானி (9), மகன் சிரீஸ் (3) கடந்த 2016-ம் ஆண்டு தான் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.சிவக்குமார் செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை தொடங்கினார். அதை லெட்சுமிபிரபா கவனித்து வந்தார். இந்த நிலையில், கடையில் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் என்கிற பாக்கியராணி (வயது 26) பெண் வேலைபார்த்து வந்தார். வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்களில், ரோஸ்லின், லெட்சுமிபிரபாவின் கடை கல்லாவில் இருந்த பணத்தை திருடுவது தெரிய வந்தது. இதனால் ரோஸ்லினை அவர் வேலையை விட்டு நீக்கினார். 
 
சிவக்குமார்
கடந்த 2016 ஜூலை 16-ம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுவன் சிரீஸைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் வலைவீசி தேடினர்.இந்த நிலையில், பாலக்கரை காவல் நிலையத்துக்குச் சென்ற ரோஸ்லின், ரீசார்ஜ் கடை உரிமையாளர் மகன் சிரீஸை தான் கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். 
 
போலீஸார் ரோஸ்லினிடம் நடத்திய விசாரணையில், லெட்சுமிபிரபா தன்னை வேலையில் இருந்து நீக்கியதால் அவர் மீது ரோஸ்லினுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும். இதனால் லெட்சுமிபிரபாவை பழிவாங்க அவருடைய மகன் சிரீஸை பாழடைந்த ஒரு வீட்டின் அருகே அழைத்துச் சென்று அவனை துப்பட்டாவால் ரோஸ்லின் கழுத்தை நெரித்தும், முகம், மூக்கு, மர்ம உறுப்பு உள்ளிட்டவற்றில் கத்தியால் கீறி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ரோஸ்லினை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.4,000 அபராதம் விதித்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தீர்ப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து ரோஸ்லின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
தீர்ப்பு குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் சம்பத்குமார் கூறியதாவது, ``தமிழக அரசும், நீதித் துறையும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு" என தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close