"நான்கு வருஷம் கழிச்சு சேவல் சண்டைக்கு அனுமதி கிடைச்சுருக்கு!" - கரூரில் களைக்கட்டிய சேவல் சண்டை | Four years After Rooster Fight Allowed in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:03:00 (16/02/2019)

"நான்கு வருஷம் கழிச்சு சேவல் சண்டைக்கு அனுமதி கிடைச்சுருக்கு!" - கரூரில் களைக்கட்டிய சேவல் சண்டை

கரூர் மாவட்டம்,பூலாம்வலசு கிராமத்தில் மதுரை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் நான்கு வருடங்களுக்கு பிறகு பாரம்பர்ய சேவல் கட்டு போட்டி தொடங்கியது.

சேவல் சண்டை

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பூலாம்வலசு. இந்த கிராமத்தில் உள்ள முத்தாளம்மன் கோயில் அருகே வருடாவருடம் சேவல் கட்டு என்கிற சேவல் சண்டை நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எப்படி மதுரை அலங்காநல்லூர் சிறப்போ,அப்படி சேவல்கட்டுக்கு இந்த பூலாம்வலசுதான் பிரசித்திப் பெற்ற ஊர். கடந்த 2015ஆம் ஆண்டு சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி கிழித்து இருவர் உயிரிழந்தனர்.  இதனால்,பூலாம்வலசில் சேவல்கட்டுப் போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

சேவல் சண்டை

'அனுமதி வழங்க வேண்டும்' என்று கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் போராடி வந்தார்கள். இந்த வருடமும் சேவல்கட்டை அனுமதிக்க வேண்டி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து,கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட சேவல்கட்டுக்கு அனுமதி அளித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று சேவல்கட்டு தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் நடத்தபடுகின்றன.

பூலான் வலசு

முதல்நாளான இன்று ஏராளமான சேவல்களோடு வந்த உரிமையாளர்கள் சேவல்கட்டு போட்டியில் தங்கள் சேவல்களை பங்கேற்க வைத்தனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த சேவல்கட்டு போட்டியை கண்டுகளிக்க திரண்டு வந்திருந்தனர். இந்த போட்டியை ஒட்டி,ஏராளமான தற்காலிக கடைகளும் முளைத்திருக்கின்றன.

கரூர்

இந்த சேவல்கட்டு போட்டியை குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தவறு எதுவும் நடக்கிறதா என்று கரூர் மாவட்டக் காவல்துறை  கவனித்து வருகிறது.  இருந்தாலும்,நான்கு வருடங்கள் கழித்து நடைபெறும் சேவல்கட்டு போட்டியை ஊர் மக்களும்,பார்வையாளர்கள் மனமகிழ்ச்சியோடு கண்டு ரசித்துவருகிறார்கள்.


[X] Close

[X] Close