புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்குப் பள்ளி மாணவர்கள் அஞ்சலி | Students paying homage For soldiers in the Pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:10:40 (16/02/2019)

புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்குப் பள்ளி மாணவர்கள் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு, புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனங்களில் ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, தீவிரவாதியால் வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த கார், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதப்பட்டது. இந்த கொடூரத் தாக்குதலில், பாதுகாப்புப்படை வீரர்கள் 44பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பல்வேறு நாடுகளில் இருந்தும் கண்டனம் எழுந்துவருகிறது. இதேபோல, அரசியல் கட்சிகள், பிரபலங்கள் கண்டனங்களை எழுப்பிவருகின்றனர். அதே நேரத்தில், இறந்த ராணுவ வீரர்களுக்கு, பலரும் வீரவணக்கம் செலுத்திவருகின்றனர். 

 புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும்  மீட்பு சங்கம் சார்பில், சந்தைப்பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி வளாகத்தில், நமது பாரதத்தைக் காக்க உயிர் நீத்த ராணுவ வீரரகளுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது. முன்னதாக, ராணுவ வீரர்களின் படங்களை வைத்து அனைவருக்கும் மலர்தூவி மரியாதைசெய்யப்பட்டது.  தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கையில் மெழுகுவத்தி ஏந்தி,  இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர். பள்ளித் தலைமையாசிரியர் விஜயமாணிக்கம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர்.


[X] Close

[X] Close