24 மணி நேரம் நீடித்த ஆபரேஷன் - கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி..! | Chinnathambi elephant captured and kept in krawl

வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (16/02/2019)

கடைசி தொடர்பு:07:46 (16/02/2019)

24 மணி நேரம் நீடித்த ஆபரேஷன் - கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி..!

கோவையைச் சேர்ந்த சின்னத்தம்பி யானையைப் பிடித்து, வரகளியாறு பகுதியில் உள்ள கூண்டில் அடைத்தனர்.

சின்னத்தம்பி

கோவையைச் சேர்ந்த சின்னத்தம்பி யானை, விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் 25-ம் தேதி, டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு பகுதிக்கு வனத் துறையினர் இடமாற்றம் செய்தனர். ஆனால், அந்தச் சூழல் பழக்கமில்லாத சின்னத்தம்பி, 31-ம் தேதியே தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தது. தொடர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியே சென்றதால், சின்னத்தம்பியைப் பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல் உடுமலைப்பேட்டை, கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினர் இறங்கினர். அதிகாலை 3  மணி முதல் சின்னத்தம்பியைக் கண்காணித்துவந்தனர். காலை 9.30 மணியளவில் மயக்க ஊசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த முறை பிடிக்கும்போது சின்னத்தம்பிக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருந்ததால், இம்முறை சின்னத்தம்பிக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், வனத் துறை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு சின்னத்தம்பியைப் பிடித்தது.

சின்னத்தம்பி

ஜே.சி.பி-க்கு பதிலாக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் லாரி வரவழைக்கப்பட்டிருந்தது. கும்கிகள் கலீம், சுயம்பு உதவியுடன் அந்த லாரியில் மதியம் 2 மணியளவில் சின்னத்தம்பி ஏற்றப்பட்டது.  3.30 மணியளவில் புறப்பட்ட வாகனம், நள்ளிரவு 12.30 மணியளவில் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு  வந்தடைந்தது. வழியில் சில இடங்களில், தன்னைக் கட்டியிருந்த கட்டையை சின்னத்தம்பி யானை உடைத்துவிட்டது.  இதனால்,  அவற்றைச் சரிசெய்து கிளம்ப சற்று தாமதம் ஏற்பட்டது.  கட்டையை உடைத்தபோது, சின்னத்தம்பியின் தும்பிக்கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பாகன்கள் அடித்த அச்சுகள் சின்னத்தம்பி யானையின் உடல் முழுவதும் தென்பட்டன.

சின்னத்தம்பி

நள்ளிரவு 2.40 மணியளவில், சின்னத்தம்பி யானையை கரால் எனப்படும் கூண்டில் அடைத்தனர். அங்கு, 24 மணி நேரமும் சின்னத்தம்பியை  கண்காணித்து சிறப்புப் பயிற்சி வழங்க உள்ளனர்.


[X] Close

[X] Close