நாகூர் தர்காவின் 462-வது கந்தூரி விழா - கோலாகலமாக நடந்த சந்தனக்கூடு ஊர்வலம்! | nagur dargah kandoori festival held in grand manner

வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (16/02/2019)

கடைசி தொடர்பு:09:48 (16/02/2019)

நாகூர் தர்காவின் 462-வது கந்தூரி விழா - கோலாகலமாக நடந்த சந்தனக்கூடு ஊர்வலம்!

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சந்தனக்கூடு ஊர்வலம் கூட்டடியிலிருந்து நாகை ஜமாத்தார்கள் தலைமையில் கோலாகலமாகத்  தொடங்கி நடைபெற்றது. 

நாகூர் தர்கா

உலகப் புகழ்பெற்ற தர்காக்களுள் ஒன்றாக, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது, நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவில், நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் சாகுல் ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த வருடம், நாகூர் ஆண்டவர் தர்காவின் 462- ம் ஆண்டு கந்தூரி விழா, பிப்ரவரி 6 புதன்கிழமையன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சந்தன கூடு ஊர்வலம்

பிப்ரவரி 19-ம் தேதி வரை நடைபெறும். நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக் கூடு ஊர்வலம், நேற்று இரவு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து, இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது. பின்னர், நாகூர் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு  பாத்தியா ஓதி, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படுவதற்கு முன்னதாக, தர்காவில் வானவேடிக்கை, பீர்வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தர்கா

சந்தனக் கூடு ஊர்வலத்தின் நிறைவில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணிக்கு நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சிகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  விழாவில், அசம்பாவித சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்கவும், போக்குவரத்து சீரமைப்புக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் துறை நிர்வாகம் மேற்கொண்டது. 

சந்தன கூடு ஊர்வலம்

இந்நிகழ்ச்சியையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழா பாதுகாப்புப் பணிகளில், நாகை மாவட்டக்  காவலர்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள், சிறப்பு காவல் படையினர் என சுமார் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார்  தெரிவித்துள்ளார்.

படங்கள்: பா.பிரசன்னா


[X] Close

[X] Close