`புகை வருது உடனே கீழே இறங்குங்க!'- ஆம்னி பேருந்து டிரைவரால் தப்பிய 35 பயணிகள் | Bus fired on perunkalathur bridge

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (16/02/2019)

கடைசி தொடர்பு:11:40 (16/02/2019)

`புகை வருது உடனே கீழே இறங்குங்க!'- ஆம்னி பேருந்து டிரைவரால் தப்பிய 35 பயணிகள்

பெருங்களத்தூர் மேம்பாலத்தில், நேற்றிரவு திடீரெனப் பேருந்து பற்றி எறிந்ததால், இரவு முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெருங்களத்தூரில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

கோயம்பேட்டிருந்து தேனி நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இரவு 9.30 மணிக்கு பெருங்களத்தூர் மேம்பாலத்தின்மீது பேருந்து சென்றபோது, பேருந்திலிருந்து லேசாகப் புகை வந்தது. இதைக் கண்ட ஓட்டுநர் பாண்டியன், உடனே பேருந்தை நிறுத்தினார். உடனடியாகப் பேருந்தில் இருந்தவர்களை இறங்கச் சொன்னார். பயணிகளும் வேகமாகப் பேருந்திலிருந்து இறங்கினர். அவர்கள் இறங்கும்போதே பேருந்தில் தீ பரவ ஆரம்பித்துவிட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. அனைவரும் வேகமாக இறங்கியதும், மளமளவெனப் பேருந்து கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியது.

உடனே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்து தீப்பற்றி எறிந்ததால், அப்பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாகவே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், அதிக அளவில் பேருந்துகளும் பிற வாகனங்களும் செல்லும். விபத்து ஏற்பட்டபோது கடுமையான போக்குவரத்து நெரிசலால் தீயணைப்பு வாகனம் உடனடியாக வரமுடியவில்லை. பேருந்து முற்றிலும் எறிந்தநிலையில் அங்கு வந்த தீயணைப்பு வாகனம், தீயை அணைத்தது. மூன்று மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து மறைமலைநகர் வரை பேருந்துகள் செல்லமுடியவில்லை.  பிறகு, படிப்படியாக போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

பெருங்களத்தூர் பேருந்து தீ விபத்து

'தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை, சானிட்டோரியம் பெட்ரோல் பங்க், தாம்பரம் தாலுகா அலுவலகம், குரோம்பேட்டை பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் ஆம்னி வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து காவல் துறையினர் இவற்றைச் சரிசெய்தால், தீயணைப்பு வாகனமும் விரைந்து வந்திருக்கும். போக்குவரத்தும் விரைவில் சரிசெய்யப்பட்டிருக்கும்' எனத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close