`நாங்க மூடுவோம்னு சொன்னோம்; நீங்க ஓட்டு போடல!' - பெண்ணின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் | "When DMK comes to power, we will find out who is responsible for Jayalalithaa's death" says stalin

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:13:00 (16/02/2019)

`நாங்க மூடுவோம்னு சொன்னோம்; நீங்க ஓட்டு போடல!' - பெண்ணின் கேள்விக்கு ஸ்டாலின் பதில்

தேனி மாவட்டம் வடபுதுபட்டியில் இன்று, தி.மு.க சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்

அப்போது, "மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும், ஏப்ரலில் தேர்தல் முடிந்துவிடும். தேர்தல் வந்தால் நாங்கள் கை காட்டும் ஆட்சிதான். தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் வந்துவிடாதா என்று மக்கள் ஏக்கத்தோடு இருக்கிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, மக்களுக்கு தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முல்லைப்பெரியாறு அணைக்கு எவ்வளவு ஆபத்துகள் வந்தது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனை எதிர்கொண்டவர் கருணாநிதி" என்று பேசினார்.

ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் பேசினர். அழகாபுரி கிராமத்திலிருந்து வந்திருந்த பெண்கள் பேசும்போது, அரசு பஸ் வசதி வேண்டும் என்றும், கழிப்பிட வசதி வேண்டும்'' என்றும் கோரினர். மேலும், `படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்' என்றும் தெரிவித்தனர். அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கிராமப் பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். அம்மாபுரம் கிராமப் பெண்கள் கூறும் போது, பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்றும், இரண்டு கிலோமீட்டர் நடந்து, வடபுதுபட்டிக்கு வந்துதான் பஸ் ஏறுவதாகவும் கூறினர்.

ஊராட்சி சபை கூட்டத்தில் மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ஸ்டாலின்

அடுத்ததாக, 'டாஸ்மாக் கடையை தி.மு.க மூடும் என்று சொன்னது. அ.தி.மு.க படிப்படியாக மூடுவோம் என்று சொல்லி தற்போது டாஸ்மாக் கடையை திறந்துகொண்டிருக்கிறார்கள்' என்று கூறினர். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், "நாங்கள் மூடுவோம் என்று சொன்னோம். ஆனா, நீங்க ஓட்டு போடலையே!" என்றார்.

ஊராட்சி சபை கூட்டத்தில் பேசும் ஸ்டாலின்

தொடர்ந்து, "தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரநிதிதி இருந்திருந்தால் அனைத்தும் செய்திருக்கலாம். மேலும், ஒரு வருடம் இங்கே எம்.எல்.ஏ இல்லை. உங்கள் குறைகளைச் சொல்ல யாரும் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடித்துவிடுவோம். முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான பிரச்னை இங்குமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தற்போது, ஆளும் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனால் 60 சதவிகிதம் பேர் உதவித்தொகை பெறமுடியவில்லை.

சசிகலா, தினகரன், எடப்பாடி ஆகியோர் கொள்ளையடித்தது சம்பந்தமான ஆவணங்களை கொடநாட்டில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதனைக் கொள்ளையடிக்கத்தான் அந்தக் கொலைகள் நடந்தன. ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் செல்வது ஒரு விதம். கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கப்போகிறார். தேர்தல் வருகிறது என்பதால்தான், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்குவதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது. இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால்தான் எடப்பாடி கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்.

பதவி கிடைக்கும் வரை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்றார் ஓ.பி.எஸ். பதவி கிடைத்ததும் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி பேசவில்லை. முதல்வராக இருந்தபோதுதான் அண்ணா மறைந்தார். இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை பற்றி செய்தி சொல்வோம். காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை. அதேபோல ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது செய்தி சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்போம்" என்றார். இக்கூட்டத்தில், ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close