`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா?’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்! | police arrests chennai engineers team who cheats people by call center

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (16/02/2019)

கடைசி தொடர்பு:17:06 (16/02/2019)

`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா?’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்!

சென்னையில் கால் சென்டரை நடத்தி இன்ஜீனியர்கள் மோசடி


சென்னையில் 7 கால் சென்டர்களை நடத்தி, லோன், இன்ஷுரன்ஸ் என்ற பெயரில் அப்பாவிகளிடம் போனில் ஆசைவார்த்தைக்காட்டி பல கோடி ரூபாயை சுருட்டிய இன்ஜீனியர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

 சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகராக துப்பு துலக்கி ஆன்லைன் மோசடி கும்பலை கைது செய்திருக்கிறது. `சதுரங்க வேட்டை' படத்தில் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் ஆசையைத் தூண்டனும் அதன் பிறகு அவர்களை ஏமாற்றணும் என்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதையே மையமாக வைத்து சென்னையில் இந்த மோசடி நடந்துள்ளது. அதாவது, சென்னையில் ஏழு இடங்களில் கால்சென்டர்களை நடத்தி பணத்தை ஏமாற்றியுள்ளனர். போனை மட்டுமே மூலதனமாக வைத்து இந்த மோசடி வேலை நடந்துள்ளது.  

செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையில்லாத அழைப்புகள் வந்திருக்கும். அதுபோல வரும் அழைப்புகளை நம்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரில்தான் போலி கால்சென்டர்கள் குறித்த விவரம் வெளியில் தெரியவந்துள்ளது. மோசடி கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு போலீஸார். 

சென்னையில் கால் சென்டரை நடத்தி இன்ஜீனியர் மோசடி


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடிப் பிரிவுக்கு சமீபகாலமாக வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக்கூறி என்னுடைய அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை மோசடி செய்துவிட்டார்கள், இன்ஷுரன்ஸ் என்று சொல்லி பணத்தை ஏமாற்றிவிட்டார்கள் என ஏராளமான புகார்கள் வந்தன. அது தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், அசோக் தாமஸ்துரை, வீராசாமி, ஜான்ரோஸ், வின்சென்ட் மோகன், பாலசுப்பிரமணியன், வனிதா, எஸ்.எஸ்.ஐ மோகன் மற்றும் காவலர் சாந்தி, சரண்மணி ஆகியோர் கொண்ட  டீம் களத்தில் இறங்கி 7 பேரை கைது செய்துள்ளது. பிடிப்பட்டவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆவடி, ஆலந்தூர், வடபழனி, வேளச்சேரி என 7 இடங்களில் கால் சென்டர் என்ற பெயரில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அலுவலகம் நடத்திவருகின்றனர். அதில், பணியாற்றுபவர்களுக்கு மாதம் சம்பளம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஒருவர் தினமும் 400 பேருக்கு போன் செய்து பேச வேண்டும். முதலில் இன்ஷுரன்ஸ் வேண்டுமா என்று பேச்சை ஆரம்பித்து லோன் வாங்கித் தருவதாகக் கூறுவார்கள். இதற்காக அவர்கள் ஆன் லைனிலேயே செல்போன் நம்பர்களைச் சேகரித்துள்ளனர். 
 

சென்னையில் கால் சென்டரை நடத்திய இன்ஜீனியர்கள்

லோன் தேவைப்படுவோர்களின் விவரங்களைச் சேகரித்த பிறகு அவர்களுக்கு கால் சென்டரிலிருந்து போன் அழைப்பு செல்லும். அப்போது அவர்களின் மனநிலையை கால்சென்டர் ஊழியர்கள் அறிந்துகொள்வார்கள். லோன் தொகைக்கு ஏற்ப தரம் பிரிக்கப்பட்டு அதன் விவரங்கள் இன்னொரு கால் சென்டருக்கு அனுப்பிவைக்கப்படும். அங்குள்ள ஊழியர்கள், அந்த நம்பரில் பேசி லோன் குறித்த விவரங்களை சேகரிப்பார்கள். அப்போது லோன் தேவைப்படுவோரின் பான் கார்டு, ஆதார் கார்டு, டெபிட் கார்டு என முழு விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பச் சொல்வார்கள். அவற்றை இன்னொரு கால்சென்டருக்கு அனுப்பி வைப்பார்கள். அங்குதான் மோசடி வேலைகள் நடக்கும். முதல் மூன்று கால் சென்டர்களில் பணியாற்றுபவர்களுக்கு மோசடி குறித்த விவரங்கள் தெரியாது. அவர்களின் வேலை, தகவல்களைச் சேகரிப்பது மட்டும்தான். 

இதையடுத்து, 4 வது கால்சென்டரில் இருப்பவர்கள் லோன் வாங்க விரும்புபவர்களிடம் விவரங்களைச் சொல்வார்கள். அப்போது, 2 லட்சம் ரூபாய் லோன் வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை புராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு சம்மதிக்காதவர்களிடம் புராசஸிங் கட்டணம் செலுத்தாமலேயே வேறுவழியில் உங்களுக்கு லோன் வாங்கித் தருகிறோம் என்று சொல்வார்கள். அவர்களின் விவரங்கள் மட்டும் அடுத்த கால்சென்டருக்கு அனுப்பிவைக்கப்படும். புராசஸிங் கட்டணம் செலுத்திய பிறகு கால்சென்டரை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ள முடியாது. ஏனெனில் சம்பந்தப்பட்ட செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். 

 சென்னையில் கால் சென்டரை நடத்தி இன்ஜீனியர் மோசடி

புராசஸிங் கட்டணம் செலுத்தாதவர்களிடம் உங்களின் வங்கி அக்கவுண்டில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யுங்கள் என்று கால்சென்டர் ஊழியர்கள் சொல்வார்கள். அதை நம்பி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு அவர்கள் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக கால்சென்டர் ஊழியர்கள் ஏமாற்றுவார்கள். அதாவது, சம்பந்தப்பட்டவரின் டெபிட் கார்டின் விவரங்களைக் கொண்டு அந்த அக்கவுண்டிலிருந்து கால்சென்டரின் வங்கி அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்யப்படும். அப்போது ஓ.டி.பி எண்ணைப் பெற லோன் வாங்க விருப்பம் தெரிவித்தவரிடம் உங்களுக்கு லோன் ரெடியாகிவிட்டது. தற்போது வங்கியிலிருந்து உங்களுக்கு ஒரு ஓ.டி.பி எண் உங்கள் போனுக்கு வந்திருக்கும். அதைச் சொல்லுங்கள் என்று கால்சென்ட்ரிலிருந்து கேட்கப்படும். அதை நம்பி, ஓடிபி எண் தெரிவித்த சில நிமிடங்களிலேயே பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுவிடும். அதோடு உங்களுடன் பேசிய செல்போன் நம்பரும் தொடர்பு எல்லைக்கு அப்பால்போய்விடும். இல்லையெனில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிடும். பணத்தை பறிக்கும் வரை பாசமாகப் பேசும் கால்சென்டர் ஊழியர்களின் விவரங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அதையும் மீறி கண்டுபிடித்து கால்சென்டர் முகவரிக்குச் சென்றால், சட்டப்பிரிவு அல்லது கஸ்டமர் சர்வீஸ் ஊழியர்களை அணுகச் சொல்வார்கள். அவர்கள் ஏமாந்தவர்களிடம் பேசி, பணத்தைத் திரும்ப கொடுத்துவிடுவார்கள். 

 20,000 ரூபாயில் தொடங்கி லட்சக்கணக்கில் இந்த கால்சென்டரில் மோசடி நடந்துள்ளது. இந்தக் கால்சென்டரை நடத்துபவர், திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், வேலைபார்க்கும் பலருக்கும் இந்த மோசடி குறித்த தகவல்கள் தெரியாது. மோசடி குறித்த தகவல் தெரிந்த ஊழியர்களையும் கால் சென்டரை நடத்துபவர், தன்னுடன் வைத்து அவர்களுக்கு லட்சத்தில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்துள்ளார். 

 சென்னையில் கால் சென்டரை நடத்தி இன்ஜீனியர் மோசடி

இந்த கால் சென்டர்களின் நிர்வாக அலுவலகம் வடபழனியில் செயல்பட்டுள்ளது. அதில் இன்ஜீனியரிங் படித்த சென்னை கொண்டிந்தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இவர்தான் கால்சென்டரை நடத்துபவருக்கு வலதுகரமாக இருந்துள்ளார். இவரின் வங்கி அக்கவுண்டில்தான் ஏமாறுபவர்களின் தொகை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (ஹெச்.ஆர்) நாமக்கலைச் சேர்ந்த பூபதி இருந்துள்ளார். வெங்கடேசனுக்கு அடுத்தபடியாகப் போரூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இருந்துள்ளார். சோளிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் சார்லஸ், திராவிட அரசன் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும்தான் கைதுசெய்துள்ளோம். இவர்களிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள், ஏராளமான ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் இந்தக் கால்சென்டரிலிருந்து போன் அழைப்புகள் சென்றுள்ளன. ஆன் லைனில் நடந்த இந்த மோசடியில் ஏமாந்து பலர் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். இந்தக் கால்சென்டரை நடத்தியவரை தேடிவருகிறோம்’’ என்றனர். 

 சென்னையில் கால் சென்டரை நடத்தி இன்ஜீனியர் மோசடி

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிரபலமான இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுவதாகத்தான் முதலில் பேசுவார்கள். அதைத் தொடர்ந்து அல்ட்ரா டிரன்ஸ் என்டர்பிரசைஸ், ஃபார்ச்சூன் என்டர்பிரைசஸ், டெக் ப்ராசஸ், கிரிஸ் கன்சல்டன்ஸி சர்வீஸ், பெதர் டெக் அசோசியேட்ஸ், கே.சி.எஸ் கன்சல்டன்ஸி, பாரத் பிசினஸ் சென்டர், ஜெய்சாய்ராம் எக்ஸிம் ப்ரைவெட் லிமிடெட், பிரபு அன்கோ என்ற பெயர்களிலிருந்து கால்சென்டர் ஊழியர்கள் போனில் பேசி ஏமாற்றியிருக்கிறார்கள். சிலருக்கு லோனுக்கான ஆஃபர் கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள். இதனால்தான் மக்கள் நம்பி ஏமாந்துள்ளனர். மேலும், கால்சென்டரில் வேலைக்கு சேர்க்கவும் கால்சென்டர் குறித்து விளம்பரமும் செய்திருக்கிறார்கள். மேலும் கால்சென்டர் அலுவலகங்கள் பக்கவாக மெயின் இடங்களிலேயே அமைந்துள்ளன. கஸ்டமர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதாகக் கூறி திட்டம் போட்டு ஏமாற்றியிருக்கிறார்கள்.

வடமாநில முகவரியில் உள்ள நிதி நிறுவனங்களின் பெயரில் லோன் தொகைக்கான ஆஃபர் கடிதமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் பொதுமக்கள் முழுமையாக கால்சென்ட்ரை நம்பியுள்ளனர். மோசடிக்குப் பயன்படுத்திய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். பணத்தை இழந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்தான் கடந்த ஓராண்டாக இந்தப் போலி காலிசென்டரை மோசடிக் கும்பல் நடத்திவந்துள்ளது. தாங்கள் வேலைபார்த்த கால்சென்டரில் இப்படியெல்லாம் மோசடி நடந்த தகவல் கிடைத்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் வேலையிலிருந்து நின்றுவிட்டனர். தற்போது ஏழு கால் சென்டர்களையும் சீல் வைத்துள்ளோம். மோசடி செய்யும் பணத்தை 45 வங்கி அக்கவுண்ட்களில் டெபாசிட் செய்துள்ளனர். அதையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்ட பலர் புகார் கொடுக்கவில்லை. இதனால் பல கோடி ரூபாயை சுருட்டியிருக்கலாம் என்று கருதுகிறோம். அதுதொடர்பான தகவல்களைச் சேகரித்துவருகிறோம்’’ என்றார். 


[X] Close

[X] Close