`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்!' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள் | Get back Kiran bedi

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (16/02/2019)

கடைசி தொடர்பு:13:40 (16/02/2019)

`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்!' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள்

”புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்” என்று முதல்வர் நாராயணசாமிக்காக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

முதல்வர் நாராயணசாமி தர்ணா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக, முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகையின் முன்பு நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. இவர்களுடன், கூட்டணிக் கட்சியான தி.மு.க, கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தத் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்துவருகின்றனர். இவர்கள் அனைவருமே இரவில் ஆளுநர் மாளிகையின் முன் சாலையிலேயே படுத்து உறங்கிவருகின்றனர். போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “13-ம் தேதி தொடங்கிய எங்கள் போராட்டத்திற்கு, வரும் 21-ம் தேதி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று கிரண்பேடி கடிதம் தந்திருந்தார். உடனே சந்திக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தும், தனியார் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து டெல்லி சென்றுள்ளார். புதுச்சேரியின் மக்கள் நலன்மீது அவருக்கு அக்கறை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் முடிவின்படி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டதைத் தொடர இருக்கிறோம்.

கிரண்பேடிக்கு எதிராக இரவில் தர்ணாவில் ஈடுபட்ட நாராயணசாமி

கிரண்பேடி, புதுச்சேரி திரும்பி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். நாளை (17.02.2019) புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும். அதற்கு மறுநாள் 18-ம் தேதி, கிரண்பேடியைக் கண்டித்து குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்கும். 19-ம் தேதி, புதுச்சேரியில் மாசிமகத் திருவிழா என்பதால், அன்றைய தினம் போராட்டம் கிடையாது. 20-ம் தேதி, 12 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். 21-ம் தேதி, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். துணைநிலை ஆளுநர் இல்லாததால், மக்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்களைப் பற்றி சிந்திக்காமல் டெல்லியில் இருக்கும் கிரண் பேடியை மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், உள்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த மூன்று நாள்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர், சாலையில் படுத்துறங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது எந்த வகையான ஜனநாயகம்? மக்களால் தோற்கடிக்கப்பட்டவரிடம், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி

அதேபோல, மாநிலங்களவை எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை மதிக்காமல், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, அந்த அரசை முடக்கும் வகையில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. பி.ஜே.பி அரசில் ஏறக்குறைய அனைத்து ஆளுநர்களும் எதேச்சாதிகார போக்கோடுதான் நடந்துகொள்கிறார்கள். கிரண்பேடி, அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கை நியாயமானது. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற்று, புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close