சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி! - திருச்சி விமான நிலையத்தில் கதறிய உறவினர்கள் | Relatives of the crpf soldiers sivachandran and govt ministers give respect his body at Trichy airport

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:27 (16/02/2019)

சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி! - திருச்சி விமான நிலையத்தில் கதறிய உறவினர்கள்

கடந்த14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த கோரத்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நேற்று மாலை இறந்த வீரர்களின் உடலுக்கு, இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 
திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட வீரர்களின் உடலுக்கு அஞ்சலி
 

திருச்சி விமான நிலையத்துக்கு நான்கு விமானங்கள் வந்தன. அவற்றில் இரண்டு விமானங்களில் இந்தத் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி மேலத் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் உடல்கள் இருந்தன. மீதமுள்ள இரண்டு விமானங்களில் கேரளாவைச் சேர்ந்த இறந்தவரின் உடலும், பெங்களூருவைச் சேர்ந்த இறந்தவர் ஒருவரின் உடலும் இருந்தன. இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனி விமானத்தில் திருச்சி வந்தார். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் சுப்பிரமணியனின் உடல் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

 
அரியலூருக்கு கொண்டு செல்லப்படும் ராணுவ வீரர் சிவசந்திரனின் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும் சுப்பிரமணியனின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களின் உடலைச் சுமந்து வந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.
 
அதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் அணிவகுப்பு செலுத்தினர். இறந்த சிவசந்திரன் உடலுக்கு அவரின் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, `கர்ப்பிணி மனைவியையும், கைக்குழந்தையையும் வைச்சிக்கிட்டு என்ன செய்வோம். கடவுளே, இறக்கமில்லையா' என அவர்கள் கதறியதைப் பார்த்த அங்கிருந்தவர்களும் கதறினர்.
 
அதையடுத்து அரசின் சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அரியலூர் மாவட்டக் கலெக்டர் விஜயலெட்சுமி, திருச்சி ஐ.ஜி வரதராஜு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி ஷியா உல்ஹக் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் உறவினர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
 
அதையடுத்து எம்.எல்.ஏ-க்கள் மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி, திருவெறும்பூர் அன்பில் மகேஷ், லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பி.ஜே.பி முக்கிய நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், பெரம்பலூர் சிவசுப்பிரமணியம், திருச்சி ராஜய்யா, ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும், தி.மு.க மாநகரச் செயலாளர் அன்பழகன், திருச்சி தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
இறுதியாக, துணை ராணுவப் படை மற்றும் முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர் சிவசந்திரன் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வாகனத்தைத் தொடர்ந்து பின்னால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் செல்கிறார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் ராணுவ வீரர் சிவசந்திரன் உடல் அவரது சொந்த ஊருக்குச் சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ராணுவ வீரர் உடல் வருகையாலும், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

 

மதுரை விமான நிலையத்தில் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் உடல் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

வீரர்கள்

இதனை தொடர்ந்து வீரரின் உடலுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து   மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மதுரை எம்.பி பாலகிருஷ்ணன், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செய்தனர். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊருக்கு  கொண்டு செல்லப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close