சென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்? - பிரேமலதா விளக்கம் | dmdk general secretary vijayakant returns from america

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (16/02/2019)

கடைசி தொடர்பு:14:23 (16/02/2019)

சென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்? - பிரேமலதா விளக்கம்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதன் பின் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர், 2014 ஜூலை மாதம் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். 2017 மார்ச்சில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாள்கள் தொடர் சிகிச்சை, மீண்டும் சிங்கப்பூர் பயணம், 2018 ஜூலையில் அமெரிக்காவில் சிகிச்சை என விஜயகாந்த் தன் உடல்நிலையைக் கவனித்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 18-ம் தேதி, இரண்டாம் கட்டமாக மீண்டும் அமெரிக்கா சென்றவர், கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

விஜயகாந்த்

அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுக்கொண்டே தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்குக் குரல்கொடுத்து வந்தார். இதற்கிடையே, சிகிச்சை முடிந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் விரைவில் சென்னை திரும்புவார் எனக் கூறப்பட்டது. இதை அவரின் மகன் விஜய பிரபாகரனும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் விஜயகாந்த். அவரின் வருகையை அறிந்த தொண்டர்கள் அதிகாலை முதலே சிறப்பான வரவேற்பு அளிக்க விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால், நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. 3 மணிக்கு வந்தவர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்திலேயே இருந்தார். இதனால் நீண்ட நேரம் தொண்டர்கள் காத்திருந்தனர். பின்னர் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்குத் தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

விஜயகாந்த்

அவர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைத்து, வணக்கம் தெரிவித்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ``அமெரிக்காவில் இருந்து அதிகாலை 3 மணிக்கே சென்னை வந்துவிட்டார். 25 மணி நேரம் பயணம் செய்து வந்ததால் பயண களைப்பில் விமான நிலையத்திலேயே இவ்வளவு நேரம் ஓய்வு எடுத்தோம். ஓய்வுக்குப் பின் உணவு அருந்திவிட்டு தற்போது வந்தார். அவ்வளவுதான். இதில் வேறு எதுவுமில்லை. விரைவில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். எங்களிடம்தான் அரசியல் கட்சிகள் பேசுகின்றன. நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக முயற்சி செய்யவில்லை’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close