`ஏமாற்றினால் லட்சத்தில் சம்பளம்' - சென்னை கால்சென்டரின் சீக்ரெட் டார்கெட்  | Chennai police busts fraudulent call center gang

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (16/02/2019)

 `ஏமாற்றினால் லட்சத்தில் சம்பளம்' - சென்னை கால்சென்டரின் சீக்ரெட் டார்கெட் 

சென்னையில் கால் சென்டர் நடத்தி மோசடி

சென்னையில் ஏழு இடங்களில் செயல்பட்ட கால்சென்டர்களில் வாடிக்கையாளர்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஏமாற்றுகிறீர்களோ அந்தளவுக்கு உங்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்று கால்சென்டரை நடத்தியவர் ஊழியர்களிடம் சொல்லியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாபிரியா தலைமையிலான போலீஸார் கால்சென்டரில் பணியாற்றிய வெங்கடேசன், விக்னேஷ், பூபதி, சதீஷ், சார்லஸ், கிருஷ்ணகுமார், திராவிடஅரசன் என ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

போலீஸாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ``நாங்கள் அனைவரும் இன்ஜினீயரிங் மற்றும் பட்டதாரிகள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால்தான் கால்சென்டரில் வேலை காலியாக இருப்பதாக விளம்பரத்தைப் பார்த்து அங்கு வேலைக்குச் சேர்ந்தோம். எங்களுக்கு சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், ஆவடி, தேனாம்பேட்டை, வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கால்சென்டர்களில் வேலை கிடைத்தது. மாதம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தார்கள். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டாக்கெட் கொடுக்கப்பட்டது. அதாவது, தினமும் 400 பேருக்கு போன் செய்ய வேண்டும். அதோடு லோன், இன்ஷூரன்ஸைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களைக் கண்டறிய வேண்டும் என்பதுதான் எங்களுக்குக் கொடுத்த டாஸ்க்.

சென்னையில் கால் சென்டர் நடத்தி மோசடி

அதை திறம்பட செய்தவர்களுக்கு இன்சென்டிவ் வழங்கப்பட்டது. அப்படிதான் நாங்கள் அதிகளவில் வாடிக்கையாளர்களைப் பிடித்தோம். இதனால் கால்சென்டரை நடத்தியவர், எங்களுக்கு அதிகமான இன்சென்டிவ்களை அள்ளிக்கொடுத்தார். அதன்பிறகுதான் இந்தக் கால்சென்டரில் லோனோ, இன்ஷூரன்ஸோ வாங்கிக் கொடுக்கவில்லை. அதற்குப்பதிலாகப் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தகவல் தெரியவந்தது. இருப்பினும் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. கால்சென்டரின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்தோம். எங்களின் வேலையைப் பார்த்து கால்சென்டரை நடத்தியவர், எங்களுக்கு முக்கிய பதவிகளைக் கொடுத்தார். அதிகளவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய எங்களுக்கு லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. ஏமாற்றிய தொகை முழுவதையும் கால் சென்டர் நடத்தியவரிடம் கொடுத்துவிட்டோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தோம்" என்று கூறியுள்ளனர். 

இதையடுத்து, தனித்தனியாக ஏழு பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒவ்வொருவரும் ஒரு ஃப்ளாஷ்பேக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். கால் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தபிறகுதான் இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் பிரபலமான நிறுவனங்களில் வேலையும் பார்த்துள்ளனர். அந்த அனுபவத்தைக் கொண்டு கால்சென்டரில் மோசடி வேலையை புத்திசாலித்தனமாக செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னையில் கால்சென்டர் நடத்தி மோசடி

பொதுவாக வடமாநிலங்களில்தான் இதுபோன்ற கால்சென்டர்கள் செயல்படும். தற்போது சென்னையிலேயே மோசடி கால் சென்டர்கள் செயல்பட்டுள்ளது போலீஸாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கால்சென்டரில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களிடம் விசாரித்தபோது மோசடிக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரியவந்தது. ஆனால், கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் மோசடி குறித்த தகவல் தெரிந்துள்ளது. இன்ஜினீயரிங் மற்றும் பட்டதாரிகள், தங்களின் அறிவை யாரோ ஒருவர் சொகுசாக வாழப் பயன்படுத்தியுள்ளனர். அந்த நபரும் ஆரம்பத்தில் கால்சென்டரில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகுதான் இந்த மோசடி திட்டத்தை வகுத்துள்ளார். அவர் சிக்கினால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும். 

வாடிக்கையாளர்களும் கால்சென்டர் ஊழியர்களும் பேசிய போன் உரையாடல்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் சில உரையாடல்கள். 

ஊழியர்: ``குட்மார்னிங் சார்'' 

கஸ்டமர்: ``குட்மார்னிங்'' 

ஊழியர்: ``சார், நாங்கள் பிரபலமான ஆபிஸிலிருந்து பேசுகிறோம், உங்களுக்கு லோன் வேணுமா?'' 

கஸ்டமர்:  ``அப்படியா'' எனச் சிறிது நேரத்துக்குப்பிறகு, ``எவ்வளவு தொகை லோன் கிடைக்கும்.'' 

ஊழியர்: ``உங்களுக்கு எவ்வளவு தொகை வேணும்'' 

 கஸ்டமர்: ``2 லட்சம் ரூபாய் மேடம்.'' 

ஊழியர்: ``2 லட்சம் ரூபாய்க்கு 20,000 ரூபாய் கமிஷனா செலுத்தணும் ''

 கஸ்டமர்: ``2 லட்சம் ரூபாய்க்கு 20,000 ரூபாயா?'' 

ஊழியர்: ``சார், உடனடியாக உங்களின் வங்கி அக்கவுண்டல பணம் வந்திடும்'' 

கஸ்டமர்: ``அப்படியா, என்னென்ன டாக்குமெண்ட் கொடுக்க வேண்டும்.'' 

ஊழியர்: ``உங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, டெபிட் கார்டு, வங்கி ஸ்டேட்மெண்ட் எல்லாவற்றையும் போட்டோ எடுத்து வாட்ஸ் நம்பருக்கு அனுப்புங்கள்

கஸ்டமர்: ``வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க'' 

 ஊழியர்: ....... நம்பரைச் சொல்கிறார். `தேங்க்ஸ்'' 

இது லோன் வாங்குவதற்கு முன் நடந்த உரையாடல். 

சென்னையில் கால்சென்டர் நடத்தி மோசடி 

மோசடிக்குப்பிறகு நடந்த உரையாடல் இது


கஸ்டமர்: ``மேடம், 2 லட்சம் ரூபாய் லோனுக்கு என்னுடைய வங்கி அக்கவுண்ட்டிலிருந்து 60,000 ரூபாய் எடுத்திருங்கீங்க''

ஊழியர்: ``உங்களுக்கு லோன் புராசஸ்ஸாகி கொண்டிருக்கிறது'' 

கஸ்டமர்: ``எவ்வளவு நாளாகும். 2 லட்சம் ரூபாய்க்கு 60,000 ரூபாய் கமிஷனா?''

 ஊழியர்: ``அது, கமிஷன் தொகை.'' 

கஸ்டமர்: ``எனக்கு எப்போது லோன் கொடுப்பீங்க....''

ஊழியர்: ``கண்டிப்பாக வந்திடும்.'' 

கஸ்டமர்: ``என்னிடம் முதலில் பேசிய இரண்டு பெண்கள் இப்போது போனை ஏன் எடுக்கவில்லை. எனக்கு டவுட்டாக உள்ளது ''

ஊழியர்: ``இரண்டு மேடமும் மீட்டிங்கில் இருக்கிறார்கள் அதனால்தான் வேறுயாராவது போன் எடுத்திருப்பார்கள்.'' 

கஸ்டமர்: ``எப்போது போன் செய்தாலும் வேறு யாராவது எடுக்கிறார்கள். நீங்கள் என்னை ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துவிட்டேன். எனக்கு லோன் வேண்டாம். 60,000 ரூபாயை திரும்பக் கொடுத்திடுங்க.'' 

ஊழியர்: ``95 நாளுக்குள் உங்கள் அக்கவுண்டில் பணம் வந்திடும்'' 

கஸ்டமர்: ``பணத்தை வாங்கும்போது அப்படிச் சொல்லலேயே'' 

ஊழியர்: ``சொல்லுங்க சார். வேற ஏதாவது தகவல் வேணுமா?'' 

 கஸ்டமர்: ``எனக்கு பணம்தான் வேண்டும். இல்லன்னா அந்த இரண்டு மேடமும் ஜெயிலுக்குப் போவாங்க.'' 

ஊழியர்: ``சார்... கோவப்படாதீங்க... கண்டிப்பாக உங்களுக்கு லோன் கிடைக்கும்.'' 

கஸ்டமர்: ``நான் கடன் வாங்கி 60,000 கொடுத்துள்ளேன். பணம் வாங்குவதற்கு முன் அந்த மேடம் நல்லா பேசினாங்க. இப்போது போனை எடுக்கமாட்டிருக்காங்க''. 

ஊழியர்: ``அவர்களைக் கண்டிப்பாக உங்களுக்கு போன் பண்ணச் சொல்கிறேன்.'' 

கஸ்டமர்: ``எனக்குப் பணம் வரவில்லையென்றால் நீங்களும் ஜெயிலுக்குப் போவீங்க.'' 

ஊழியர்: ``ஓகே சார்... பணம் அல்லது லோன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.'' 

கஸ்டமர்: ``ஓகே'' 

ஊழியர்: ``உங்களுக்கு வேறு ஏதாவது தகவல் வேணுமா''

கஸ்டமர்: ``வேண்டாம்.'' 

ஊழியர்: ``எங்களைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி'' 

 என்பதோடு போன் உரையாடல் முடிவடைகிறது. 

சென்னையில் கால்சென்டர் நடத்தியவர்கள் பயன்படுத்தி டிவைஸ்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``சென்னையில் கால் சென்டர் நடத்தி மோசடி செய்தவர்களிடமிருந்து ஓடிபி நம்பர்களை தானாக உருவாக்கும் பென் டிரைவ் போன்ற டிவைஸ்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த டிவைஸ் மூலம்தான் மோசடிகள் நடந்துள்ளன. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். லோன் வேண்டும் என்று  விண்ணப்பிப்பவர்கள் தங்களின் பான் கார்டு, ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் கூறவேண்டாம். தற்போது கால்சென்டரில் நடத்தி மோசடி செய்தவர்கள், லோன் தேவைப்படுவோர்களின் டெபிட் கார்டு ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு விவரங்களைச் சேகரித்து அதன்மூலம் மோசடி செய்திருக்கிறார்கள். ஏ.டி.எம், டெபிட் கார்டுகளில் உள்ள 16 இலக்க எண்களும், கார்டின் பின்பக்கத்தில் உள்ள சிவிவி நம்பரும் இருந்தாலே உங்கள் அக்கவுண்டிலிருந்து பணத்தை எடுத்துவிடலாம். மேலும், செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி எண்களை யாருக்கும் பகிர வேண்டாம். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் ஆன் லைன் மோசடியிலிருந்து தப்பிக்கலாம்" என்றார்.


[X] Close

[X] Close