`என்னால் முடிந்த சிறு உதவி இது'- உயிரிழந்த வீரரின் குழந்தை படிப்புச் செலவை ஏற்ற கல்லூரி தாளாளர் | Ariyalur College administration to take care of CRPF constable Siva chandran's son education

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (16/02/2019)

`என்னால் முடிந்த சிறு உதவி இது'- உயிரிழந்த வீரரின் குழந்தை படிப்புச் செலவை ஏற்ற கல்லூரி தாளாளர்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவசந்திரனின் குழந்தை படிப்புச் செலவைத் தனியார் கல்லூரி தாளாளர் ஒருவர் ஏற்றுள்ளார்.

``எங்கள் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன்- சிங்காரவல்லி தம்பதியின் இரண்டாவது பையன் சிவசந்திரன் காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்துக்கு மிகவும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்கிறார்" அரியலூர் மாவட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன்.

கல்லூரி தாளாளர்

அவர் மேலும் கூறுகையில், ``விடுமுறைக்குப் பின்னர் பணிக்குத் திரும்பிய வீரர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவ பணிக்குச்சென்று ஒரு வாரக் கால அளவில் இப்படி நிகழும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. வீரமரணம் அடைந்த எங்கள் மாவட்ட வீரர் சிவசந்திரனுக்கு சிவமுனியன் என்ற இரண்டு வயது ஆண்மகன் உள்ளார். தற்போது அவரின் மனைவி காந்திமதி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இக்குழந்தையை நல்ல முறையில் ஈன்றெடுக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், நான் உடையார்பாளையம்-தத்தனூரில் மீனாட்சி இராமசாமி என்ற கல்வி நிறுவனங்களை என் சகோதரர்களோடு இணைந்து நடத்திவருகிறேன். ராணுவ வீரர் சிவசந்திரனின் குழந்தைகளுக்கு உதவியாக இனி எங்கள் கல்வி நிறுவனம் இருக்கும். தொடக்கக்கல்வி முதல் கல்லூரி வரையிலான இலவசக் கல்வியை இனி நான் வழங்குகிறேன். மேலும், ஐம்பதாயிரம் ரூபாயை என்னால் முடிந்த சிறு உதவியாக அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்கி ஆறுதலைத் தெரிவிக்க உள்ளேன்.

ஏற்கெனவே எங்கள் கல்லூரி மூலம் மாவட்டத்தின் நூறு ஏழை மாணவர்கள் வருடா வருடம் மீனாட்சி இராமசாமி அறக்கட்டளை மூலம் பயன்பெறுவதுண்டு. நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்குப் பயங்கரவாத தாக்குதல் மட்டுமின்றி இயற்கை சீற்றம், மழை, வெயில் மற்றும் ரத்தம் உறைய வைக்கின்ற ஜீரோ டிகிரி பனிப்பிரதேசத்தில்கூட தன் நாட்டுக்காக உயிரையும் பொருட்படுத்தாமல் காவல் காக்கின்ற ரியல் ஹீரோஸ். நாட்டுக்காக வீடு வாசல் சொந்தபந்தம் மற்றும் தன் சாவையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற உத்தமன்களுக்கு எவ்வளவு பேர் மரியாதை செய்கிறோம் என்றால் அது சிறுதானிய அளவே.

சிவசந்திரன்

ஏழரை கோடி தமிழக மக்களுக்காகவும் நூறு கோடி இந்தியர்களுக்காகவும் நம் நாட்டைப் பாதுகாக்கவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். வீட்டுக்காகத் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்பவன் ஒரு தாய்க்கு  நல்ல மகன், ஒரு நல்ல குடும்பத்தலைவன். ஒரு நாட்டுக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்பவன் பாரதத்தாய்க்கு நல்ல மகன் தேசத்தின் சிறந்த குடிமகன். சிலர் செய்கின்ற தியாகங்களினால் தான் பலர் நிம்மதியாக இருக்கின்றனர். சிலருக்கு அது வீடாக உள்ளது. சிலருக்கு அது நாடாக இருக்கிறது. மற்றவர்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவோம். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். வீட்டுக்கும் நாட்டுக்கும் நம் தாய்த்திருநாட்டுக்காக தன் இன்னுயிரை நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வீரவணக்கம்" என்று கூறினார்.


[X] Close

[X] Close