`எப்பவுமே போதையில் தான் இருப்பார்!'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்  | Our headmaster always in alcohol influence, alleges tiruvannamalai government school Teachers

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (16/02/2019)

`எப்பவுமே போதையில் தான் இருப்பார்!'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார் 

``தலைமையாசிரியர் மனோகர் ஒரு பெரும் குடிகாரர். அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது. எப்பவுமே போதையில் தான் இருப்பார்" என்று சக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போதையில் தலைமையாசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பிளாக் நிர்த்தொம்பை கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகர் என்பவர் நேற்று பள்ளி நேரத்தில் பாடம் நடத்தாமல் மாணவ, மாணவிகளை விளையாட அனுப்பிவிட்டு, வகுப்பறையிலேயே மது குடித்துவிட்டு போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்திருக்கிறார்.

வகுப்பறையில் மது குடித்துவிட்டு காலிபாட்டில், ஊறுகாய் பாக்கெட், வாட்டர் பாக்கெட், சிப்ஸ் பாக்கெட், ஒரு கிண்ணத்தில் உணவு போன்றவை டேபிள் மீது சிதறிக்கிடந்தது. தலைமை ஆசிரியர் மனோகர் போதையில் மயங்கி இருக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. மனோகரின் இந்தச் செயல் அந்தப்பகுதி மக்களிடையேவும் ஆசிரியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமையாசிரியர் மனோகர்

இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் கேட்டபோது, ``மனோகர் ஒரு பெரும் குடிகாரர். அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது. எப்பவுமே போதையில் தான் இருப்பார். அவரால் மாணவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. தினமும் குடித்துவிட்டுதான் பள்ளிக்கே செல்வார். இதுபோன்ற செயலால் அவர் ஏற்கெனவே ஒருமுறை சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன் பிறகுதான் நீர்த்தொம்பை பள்ளிக்கு மாற்றப்பட்டார். இங்கு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மனோகர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்தான் அவர் வகுப்பறையில் குடித்துவிட்டு அமர்ந்து இருக்கும் வீடியோ வாட்ஸ்அப் மூலம் பரவியுள்ளது" என்றனர்.

இந்த விடியோவைப் பார்த்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் மனோகரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ``தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்காமல் ஒழுங்கினமாக நடந்திருப்பது வேதனையாக உள்ளது" என்றனர் ஆசிரியர்களும் பெற்றோர்களும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close