சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்! - பின்னணி என்ன? | IAS officers transferred in TN

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (16/02/2019)

கடைசி தொடர்பு:20:10 (16/02/2019)

சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்! - பின்னணி என்ன?

ஐந்தாண்டுகளுக்கும் மேல் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

ராதாகிருஷ்ணன்

அதேபோல், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக இயக்குநர் என்ற முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாற்றம் அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக அமைச்சர் வேலுமணி துறையில் இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன் குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு அதிகாரியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக, சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அந்தத் துறையில் நீடித்துவந்தார். மேலும், துறையின் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாகவும் இருந்தார். ஆனால், தமிழக முதல்வருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே சமீபத்தில் சில வருத்தங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், தேர்தல் ஆணையத்திடமும் ஒரே துறையில் பல ஆண்டுகளாகக் கோலோச்சும் அதிகாரிகள் குறித்த கோப்பும் சென்றுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானார். ஆனால், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவராக அவர் இருந்ததால் மாற்றம் வேண்டும் என்பதற்காக வேலுமணியின் பொறுப்பில் இருக்கும் துறைக்கே அவர் மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளராக இருந்த குமரகுருபரன் பத்திரப் பதிவு துறையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதை மேலிடம் விரும்பவில்லை என்று ஏற்கெனவே புகைச்சல் இருந்தது. இந்த நிலையில், பவர்புல்லான துறையிலிருந்து அவரை பேரிடர் மேலாண்மை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ராதாகிருஷ்ணன் மாற்றத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற ஆச்சர்யம் அனைத்து அமைச்சர்களிடமும் உள்ளது. ஒரே துறையில் இருந்ததால் இந்த மாற்றம் என்றால், நிதித்துறை உட்பட பல முக்கிய துறைகளில் பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் தொடரும்போது இவர்களை மட்டும் மாற்றம் செய்ததற்கு பின்னணியில் வேறு காரணங்கள் இருப்பதாகக் கோட்டை வட்டார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாள்களில் இன்னும் ஒரு பட்டியல் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். 


[X] Close

[X] Close