‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய் | One-and-a-half year old girl killed in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (17/02/2019)

கடைசி தொடர்பு:04:30 (17/02/2019)

‘ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!’ -கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்

வாணியம்பாடியில், ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, தாய் மற்றும் கள்ளக்காதலனை கைதுசெய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொலை

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் நளினி (24). இவருக்கும், பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்ற கட்டட மேஸ்திரிக்கும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சிவக்குமார், குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்து, கட்டட வேலைசெய்து வந்தார். அங்கு, சென்னையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முரளி (24) என்பவருடன் நளினிக்கு, ரகசிய தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. அவர், கண்டித்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று கணவனை பிரிந்த நளினி சமீபத்தில் பெண் குழந்தை மற்றும் இரண்டாவது மகனுடன், வாணியம்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். முதல் மகனுடன் கணவர் சிவக்குமார் பெங்களூரிலேயே தனியாக வசித்துவருகிறார். பெற்றோருடனும் சண்டை போட்ட நளினி, வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் வாடகைக்குத் தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கினார். நளினியுடன், கள்ளக்காதலன் முரளியும் சேர்ந்துவாழ்ந்தார். இந்த நிலையில், 15-ம் தேதி மாலை, நளினி அதே பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கள்ளக்காதலன் முரளி மட்டும் வீட்டில் குழந்தைகளுடன் இருந்துள்ளார். கடைக்குச் சென்றுதிரும்பிய நளினி, பெண் குழந்தை காயங்களுடன் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, குழந்தையை தூக்கிக் கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். உயிரிழந்த பெண் குழந்தையின் கன்னத்தில் கையால் பலமாக தாக்கியிருப்பது, நகக் கீறல்கள், பற்களால் கடிக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளங்கள் பதிந்திருந்தன. பாலியல் வன்கொடுமை செய்து குழந்தை கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி, வாணியம்பாடி டவுன் போலீஸாருக்கும், மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.

போலீஸார், 16-ம் தேதி காலை சம்பவம் நடைபெற்ற நளினியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். பெண் குழந்தை கொலை தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் தாய் நளினி மற்றும் கள்ளக்காதலன் முரளியைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். முரளியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், ஆபாசப் படங்கள் அதிகளவில் இருந்தன. எனவே, நளினி கடைக்கு சென்றுவந்த இடைப்பட்ட நேரத்தில், முரளி பாலியல் வன்புணர்வு செய்து குழந்தையை அடித்துக் கொன்றாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், வாணியம்பாடி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


[X] Close

[X] Close