`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்! | govt engineer arrested for bribe in Nagercoil collector Office

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:42 (17/02/2019)

`ஒப்பந்ததாரர்கள் கொடுத்த லஞ்சம்' - நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாசலில் சிக்கிய பொறியாளர்!

நாகர்கோவிலில் பேரூராட்சி பொறியாளரின் அரசு காரை கலெக்டர் அலுவலக வாயிலில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை செய்தனர். சோதனையில் 3.70 லட்சம் ரூபாய் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ்

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளராக மாடசாமி சுந்தர்ராஜ் பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று இரவு நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அரசு ஜீப்பில் அவரது  சொந்த ஊரான திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார். இதற்கிடையில் மாடசாமி சுந்தர்ராஜின் ஜீப்பில் பணம் இருப்பதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில்  வைத்து மாடசாமி சுந்தர்ராஜின் ஜீப்பை  லஞ்ச ஒழிப்பு போலீஸார்  தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஜீப்பில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 960 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்சம்

அந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கேட்டபோது பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியுள்ளார். தொடர்ந்து போலீஸார் விசாரணை செய்த போது அந்த பணம் பேரூராட்சி பணிகளை செய்த வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு பில் பாஸ் செய்வதற்காக அவர்களிடம் இருந்து வாங்கிய லஞ்சப் பணம் எனத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பணத்தைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், பேரூராட்சிகளின் பொறியாளர் மாடசாமி சுந்தரராஜ் மற்றும் அரசு ஜீப் டிரைவர் ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வாயிலில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடி நடவடிக்கை அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close