`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்! | puducherry cm narayanasamy accepts challenge from kiran bedi

வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (17/02/2019)

கடைசி தொடர்பு:10:13 (17/02/2019)

`சவாலுக்குத் தயார்; இடமும் ரெடி மேடம்' - கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி பதில்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கொடுத்த சவாலை ஏற்றுள்ளார் முதல்வர் நாராயணசாமி. 

 நாராயணசாமி தர்ணா

``பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமையை இழந்துவிட்டோம். மக்கள் நலத்திட்டங்கள் எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். அனைத்திலும் தனக்குத்தான் முழு அதிகாரம் என்று சொல்லிக் கொண்டு மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். இலவச அரிசி, வேட்டி சேலை உள்ளிட்ட 39 மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகள் அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவற்றுக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இவரின் இத்தகைய செயல்களால் ஒட்டுமொத்த மாநிலமே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது" என இப்படி அதிகப்படியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. 

தர்ணா

தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திடும் வரை ஆளுநர் மாளிகையை விட்டு நகரமாட்டோம் என 13ம் தேதி கறுப்புச் சட்டையுடன் தர்ணாவில் ஈடுபட்டார் நாராயணசாமி. இன்றுடன் 5ம் நாளாக அமைச்சர்கள் ஆதரவாளர்களுடன் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ள அதேநேரத்தில் கிரண் பேடியோ டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கிரண் பேடி, ``நாராயணசாமி 7ம் தேதி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் எனக்கு 8ம் தேதி கையில் கிடைத்தது. 3 பக்கம் உள்ள அந்த கடிதத்தில், 36 விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த கடிதத்தில் அதற்கான பதில் தேவை என்றும் அவர் குறிப்பிடவில்லை, பதில் கிடைக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் தற்போது அந்தக் கடிதத்திற்கு பதில் வேண்டும் என்று தர்ணாவில் தற்போது அமர்ந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 21ம் தேதி தான் புதுச்சேரி திரும்பவுள்ளார். அதுவரை நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளார் நாராயணசாமி. 

 நாராயணசாமி

தொடர்ந்து தனது நேற்று நாராயணசாமி போராட்டம் நடத்தும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கிரண் பேடி, ``யாராவது ஒரு சாமானியன் உங்கள் அலுவலகத்துக்கு வெளியே இதேபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் காவல்துறையினர் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்? தயவு செய்து அதனைச் செய்யுங்கள். தயவு செய்து காவல்துறையினர் அதனைச் செய்யுங்கள்?’ என்று கூறியிருந்தார். உடனே அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, ``‘கைது செய்தாலும் அதனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். 

கிரண் பேடி

இவர்களின் இருவரின் போராட்டத்தால் புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் சூழ்நிலைகள் பரபரத்து கிடக்க மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார் கிரண் பேடி. அதில், ``மரியாதைக்குரிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களே நீங்களே இடம் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யுங்கள். ஒரு திறந்த மன்றத்தில் மக்கள் முன்னிலையில் பொது பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். அதற்கு நான் தயார். அப்போது தெரியும் ஆளுநர் மாளிகை எந்த அளவு வெளிப்படைத்தன்மையுடனும், ஏழை மக்களின் நீதிக்காகவும், தேவைக்காகவும் உழைக்கிறது என்பது தெரியும்" எனச் சவால் விடுத்திருந்தார். இதற்கிடையே தற்போது கிரண்பேடி விடுத்த சவாலை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். ``புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே எந்த நேரத்திலும் விவாதம் நடத்தத் தயார்'' என்று அவர் கூறியுள்ளார். இதனால் 21ம் தேதி திரும்புவதாக அறிவித்திருந்த கிரண் பேடி அவசரமாக இன்றைக்கே புதுச்சேரி திரும்புகிறார். இதை ஆளுநர் மாளிகை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாராயணசாமியை தொடர்பு கொண்டு தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நாராயணசாமி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close