`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு! | stalin slams bjp and admk

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (17/02/2019)

கடைசி தொடர்பு:12:36 (17/02/2019)

`மோடியைத் தாக்கினால் என்னை இந்து மதத்தின் விரோதி என்பார்கள்' - ஸ்டாலின் பேச்சு!

நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பாசிச பா.ஜ.க, அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசுகளை வேரறுப்போம் என ஸ்டாலின் பேசியுள்ளார். 

ஸ்டாலின்

மதுரையில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசினார். அதில், ``பாசமும், பற்றும், நல்லுறவும் தி.மு.கவுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் எப்போதும் உண்டு. இந்த நட்பை யாராலும் பிரித்திட முடியாது. சிலர் அரசியலுக்காக, ஏன் தேர்தலுக்காக இஸ்லாமியர்களை நண்பர்களாகக் காட்டிக் கொள்வார்கள். சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பார்கள். ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரையில் அப்படியல்ல. காரணம், சிறுபான்மையினருக்கும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் தி.மு.கவுக்குமான நட்பு என்பது இந்த இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நாட்டு மக்களின் இதயங்களைப் பிரிப்பதன் மூலமாக இந்த நாட்டைப் பிரிக்கும் காரியத்தைச் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதைவிட ஆபத்தானது அவர்கள் இந்த நாட்டின் ஆட்சியையே கைப்பற்றி விட்டார்கள். அதுதான் மிகப்பெரிய ஆபத்து. சில நாட்களுக்கு முன்னால் திருமாவளவன் நடத்திய திருச்சி மாநாட்டில் பேசும்போது, இந்தியாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. யாரால்? எதிரி நாட்டால் வரவில்லை, இங்கே ஆட்சியில் இருப்பவர்களால் தான் வந்திருக்கிறது, வரப்போகிறது என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இப்படிப்பட்ட ஆபத்தான மனிதர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை முதலில் நாம் மீட்க வேண்டும்.

ஸ்டாலின்

ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனச் சொன்னால், மோடியிடம் இருந்து பிரதமர் பதவியை மீட்பதே இந்தியாவை மீட்பதற்கான அர்த்தம். மோடி பிரதமர் பதவியில் இருக்கும் வரையில் இந்திய இதயங்களை இணைக்க முடியாது. பிரிவினை தான் நடக்கும். பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி என்ன சொன்னார்? ‘எனக்கு ஒரே ஒரு புனித நூல் தான் உண்டு, அது என்னவென்று கேட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்’ என்று சொன்னார். ஆனால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அன்றிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவது தான் அவரது வேலையாக இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளின் அதிகாரங்களையும் பறித்து அதனைச் சிதைப்பது தான் மோடியின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமா? நீதிபதிகளே மிரள்கிறார்கள். ரிசர்வ் வங்கியா? ஆளுநர்களே ஓடுகிறார்கள். சி.பி.ஐயா? அலுவலகத்தையே பூட்டுகிறார்கள். மக்கள் கண்காணிப்பு ஆணையமா? செயல்படக்கூடாது என்கிறார்கள். தகவல் ஆணையமா? எந்தத் தகவலும் தரக்கூடாது என மிரட்டப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமா? தேர்தலையே நடத்தக்கூடாது என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தேசியகீதத்துக்குக் கூட காத்திருக்க முடியாத ஒரு பிரதமர். இப்படி ஒரு பிரதமரை இந்தியா இதுவரை பார்த்தது இல்லை, இனியும் எவ்வளவு காலத்துக்கு பார்த்துக்கொண்டு இருப்பது என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சேர்ந்து மோடியை வீழ்த்துவதற்கு உறுதியெடுத்துக்கொண்டு அந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின்

அனைத்து மக்களும் மோடி அரசால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இதே மதுரையில் அண்மையில் மோடி வருகை தந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார். அது அடிக்கல் நாட்டு விழா அல்ல, அடிக்கல் நாடக விழா. மோடியால் பயன்பெற்றது, பயன்பெற்றுக் கொண்டிருப்பது சில கார்ப்பரேட் கம்பெனிகள் தான். இந்தியப் பொருளாதாரத்தைச் சூறையாடிவிட்டுச் சிலர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டார்கள். ஆனால், பொருளாதாரத் துறையில் முன்னேறி வருவதாகப் பிரதமர் தான் சொல்கிறார். நாட்டின் உண்மை நிலைமை அப்படியா? இல்லை. உலகில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா இருந்து கொண்டிருக்கிறது. இதுதான் மோடி காட்ட விரும்பிய வளர்ச்சியா? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி வரும் நாடாக இந்தியா இருக்கிறது. 

நாளைக்கே சிலர் சொல்லுவார்கள், பார்த்தாயா முஸ்லீம் லீக் மாநாட்டில் போய் மோடியைத் தாக்குகிறார் மு.க.ஸ்டாலின் என்று குற்றம் சாட்டுவார்கள். ஏன், இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பா.ஜ.கவினர் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல. அவர்கள் தான் உண்மையில் இந்து மதத்துக்கும், இந்திய நாட்டுக்கும் எதிரிகள். அவர்கள் தான் அரசியலில் மதத்தைக் கலந்து மதத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்கள்.

ஸ்டாலின்

நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பாசிச பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் யாரால் நடத்தப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. மதம் வேறு, அரசியல் வேறு என்பதே நம்முடைய அரசியலாக அமைந்திட வேண்டும்.  பா.ஜ.கவுக்கு துணைபோகும் அ.தி.மு.க அரசுகளை வேரறுப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close