`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்!’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள் | Tiruvallur Village people suffers without electricity for the past 16 days

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:45 (18/02/2019)

`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்!’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்

திருவள்ளூர் அருகே காக்களூர் கிராம மக்கள் கடந்த 16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவித்து வருகிறார்கள். 

மின்சாரம்

திருவள்ளூர் அருகே உள்ளது காக்களூர் கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அன்னை தெரசா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4000-த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அரசு,  குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிட சான்று மற்றும் முதலமைச்சரின் ஆயுள் காப்பீட்டு திட்ட அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வந்த பொதுமக்களுக்கு சமீபத்தில் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அன்னை தெரசா நகர் பகுதிக்குக் கடந்த ஒன்றாம் தேதி வந்த மின்சாரத் துறை அதிகாரிகள், வீடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகளைத் துண்டித்திருக்கின்றனர். காரணம் கேட்ட பொதுமக்களிடம், ஜே.ஈ தினகரன் எந்தப் பதிலையும் சொல்லாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தொழுவூரைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் மோகன், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். அந்த மனு மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். திருவள்ளூர் சப் கலெக்டர் ரத்தினத்திடம், மோகன் மனு அளித்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் சீனிவாசன் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மனு

இந்த நிலையில்தான் மின் துறை அதிகாரிகள் அப்பகுதி வீடுகளின் மின் இணைப்புகளைத் துண்டித்திருக்கின்றனர். அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிப்பதற்கு ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன்தான் காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள். மேலும், அவர் பதவியில் இருக்கும்போது இந்த இடத்தை பல லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு,  பலருக்கு இடத்தை விற்றுள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள். அதுதொடர்பாக சிலர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதமும் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக மோகனிடம் பேசினோம். ``நான் 2013-ம் ஆண்டிலிருந்து இந்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஆறு வருடங்களாகப் போராடி வருகின்றேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒன்றும் ஆதாயம் தேடும் அரசியல்வாதி இல்லை. வேண்டுமானால் இந்த மக்களிடம் என்னைப் பற்றிக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகனிடம் மோகன் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் புகார் அளித்தனர். அவர் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை மின் இணைப்பு தரப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் ஜெயசீலனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். `நான் தலைவராக இருந்தபோது என் சொந்தப் பணத்தில் அந்தப் பகுதிக்கு போர் போட்டுக் கொடுத்தேன். தெரு விளக்கும் போட்டுக் கொடுத்தேன். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதை என்னிடம் நேரில் வந்து யாராவது சொல்லமுடியுமா?’ என்றதோடு முடித்துக்கொண்டார்.


[X] Close

[X] Close