`13 காளைகள்… 2 வீட்டுமனைகள்…1 கார்!' - கோவை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய மதுரை | Jallikattu held in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (18/02/2019)

கடைசி தொடர்பு:08:56 (18/02/2019)

`13 காளைகள்… 2 வீட்டுமனைகள்…1 கார்!' - கோவை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய மதுரை

கோவை ஜல்லிக்கட்டு

``கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 13 காளைகளை அடக்கிய மதுரை வீரர் கார்த்தி 2 வீட்டு மனைகளும் 1 கார் மற்றும் தங்க நாணயங்களையும் தட்டிச் சென்றார். முதல் பரிசு மட்டுமல்ல இரண்டாம் மூன்றாம் பரிசும் சிறந்த காளைக்கான முதல் பரிசையும்  மதுரையே வென்று அசத்தியது.

சென்ற வருடத்தைப் போலவே கோவையை அடுத்த செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடத்தப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து நடத்திய இந்த ஜல்லிக்கட்டு விழாவில், `அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.

கோவை ஜல்லிக்கட்டு

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திவிட்டு, உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியை துவக்கி வைக்க, மாடுபிடி வீர்கள் உறுதிமொழி ஏற்றார்கள். வாடிவாசலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, வாடிவாசலிலிருந்து காளைகள் சீற ஆரம்பித்தன… தொடை தட்டி திமிலேறினார்கள் வீரர்கள்.

இந்தப் போட்டியில் 13 காளைகளை அடக்கி மதுரை வீரர் கார்த்தி கலக்கினார். ஆரம்பத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ஒரு வீட்டு மனை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் வேகத்தில் கார்த்தி அடுத்தடுத்து காளைகளைப் பாய்ந்து அடக்க… மெய் சிலிர்த்துப்போய் ஆரம்பத்திலேயே அவருக்கு ஒரு வீட்டு மமையை வழங்கிவிட்டார்கள். இறுதியாக சிறந்த மாடுபிடி வீரருக்கான வீட்டுமனைப் பட்டாவும்.. ஒரு காரும் அவருக்குப் பரிசாக  வழங்கப்பட்டது. தவிர அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்துக்  காளைக்கும் வழங்கிய  2 கிராம் தங்க நாணையத்தில் காளைக்கு தலா ஒன்று வீதம் 13 காளைகளுக்கும் சேர்த்து 26 கிராம் தங்க நாணயத்தை அள்ளிச் சென்றார் கார்த்தி.

கோவை ஜல்லிக்கட்டு

சிறந்த மாடுபிடி வீரருக்கான  இரண்டாம் பரிசை  மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் மூன்றாம் பரிசை மதுரையைச் சேர்ந்த அஜர் என்பவரும் தட்டிச்சென்றனர். இவர்கள் இருவருக்கும் தலா ஒரு வீட்டு மனையும், தலா ஒரு பைக்கும் வழங்கப்பட்டது. இதேபோல சிறந்த காளைக்கான முதல் பரிசான கார்,  மதுரையைச் சேர்ந்த விஜய் என்பவரின் காளைக்கும்  கிடைத்தது. எம்.பி.ஆம்புலன்ஸ் காளைக்கு இரண்டாம் பரிசாக இரு சக்கர வாகனமும்,  மூன்றவது பரிசாக,  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்னக் கொம்பன் காளைக்கு இரு சக்கர வாகனமும் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்களில் 71 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அலங்காநல்லூரைச் சேர்ந்த, 26 வயதான சங்கர் மற்றும் மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளைஞர் சந்துரு ஆகிய இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close