`குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்... ப்ளீஸ்!’ -நடிகை ஸ்ருதிஹாசன் அட்வைஸ் | 'Drink and do not drive!' - Actress shruti Haasan Advise

வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (18/02/2019)

கடைசி தொடர்பு:08:31 (18/02/2019)

`குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்... ப்ளீஸ்!’ -நடிகை ஸ்ருதிஹாசன் அட்வைஸ்

``சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’’ என்று, நடிகை ஸ்ருதிஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.

பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கிய ஸ்ருதிஹாசன்

வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில், ஆண்டுதோறும் சர்வதேச அளவில், ‘ரிவேரா’ என்கிற கலை மற்றும் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான `ரிவேரா-19' விழா, கடந்த 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாள்கள் விமரிசையாக நடைபெற்றது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 700-க்கும் அதிகமான பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 38,000 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், வாலிபால், கைப்பந்து, மிஸ்டர் ரிவேரா உட்பட 16 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் நடனம், நாட்டியம், நாடகம், ஒரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரைப் போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, தமிழ் மற்றும் ஆங்கில குறும்படம் தயாரித்தல் ஆகிய போட்டிகளுடன் 129 நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 

கலை நிகழ்ச்சி

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.20 லட்சம் மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 17-ம் தேதி நடைபெற்ற ரிவேரா நிறைவு விழாவில், சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு, சாம்பியன் விருதுபெற்ற தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி பல்கலைக் கழகத்துக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். அப்போது ஸ்ருதிஹாசன் பேசுகையில், ``வாழ்க்கையில் எதையும் நல்லதாகவும், தன்னம்பிக்கையுடனும் கையாண்டால் வெற்றி நிச்சயம். சாலை விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டத் தெரியவில்லை என்றால் வண்டி ஓட்டவேண்டாம். அதேபோல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது... ப்ளீஸ்’’ என்றார். 

கலை நிகழ்ச்சி


[X] Close

[X] Close