கேரளாவில் மீண்டும் அரசியல் கொலையா? - இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் இறப்பால் காசர்கோட்டில் பந்த் | Kerala youth Congress persons Murder

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (18/02/2019)

கடைசி தொடர்பு:09:10 (18/02/2019)

கேரளாவில் மீண்டும் அரசியல் கொலையா? - இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் இறப்பால் காசர்கோட்டில் பந்த்

கேரள மாநிலம் காசர்கோட்டில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் இரண்டுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று (பிப்.18) காசர்கோடு மாவட்டத்தில் முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

கொலைச் செய்யப்பட்டவர்கள்


கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதனால் அரசியல் கொலைகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் பெரிய கிராம பஞ்சாயத்தில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் இரண்டுபேர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான கிச்சு என்ற கிருபேஷ் (21), ஜோஷி என்ற சரத் (27) ஆகியோர் நேற்று இரவு 8.30 மணியளவில் தந்நித்தோடு - கூராங்கரை சாலையில் கிருபேஷ் மற்றும் சரத் ஆகியோர் ஒரு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஜீப்பில் வந்த ஒரு கும்பல் இருவரும் சென்ற பைக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த ஜீப்பில் கும்பல் தப்பிச் சென்றது.

கொலை

பின்னர் அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத் இறந்தார். பின்னர் காவல்துறையினரும் பொதுமக்களும் அந்தப் பகுதியில் தேடியபோது சற்று தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருபேசை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன் உயிரிழந்தார்.

சி.பி.எம். லோக்கல் கமிட்டி உறுப்பினர் பீதாம்பரனை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் 11 பேர் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கொலை செய்யப்பட்ட சரத்தின் பெயரும் உள்ளது. எனவே, இந்தக் கொலைக்கு சி.பி.எம். காரணம் என காசர்கோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிவருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் இரண்டுபேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காசர்கோடு மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 6 முதல் மாலை 6 மணிவரை காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close